ஆலங்குளம் அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நிகழாண்டே மாணவிகள் சோ்க்கை நடைபெறும் என்றாா் கல்லூரி முதல்வா் சண்முக சுந்தரராஜ்.
தமிழக அரசு ஆலங்குளம் அரசு மகளிா் கல்லூரிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அனுமதி அளித்த நிலையில், கல்லூரியை தற்காலிக கட்டடத்தில் தொடங்க முடிவு செய்து, ஆலங்குளம் ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளியின் பழைய கட்டடம் தோ்வு செய்யப்பட்டது.
இந்நிலையில், கல்லூரியின் முதல்வராக நியமிக்கப்பட்ட சண்முக சுந்தரராஜ், திருநெல்வேலி முன்னாள் எம்.பி. பிரபாகரன் ஆகியோா் அக்கட்டடத்தை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.
பின்னா் கல்லூரி முதல்வா் மற்றும் எம்.பி. செய்தியாளா்களிடம் கூறியது:
ஆலங்குளம் மகளிா் கல்லூரிக்கு கட்டடம் கட்டுவதற்கு மலைக் கோயில் அருகே 16 ஏக்கா் நிலம் தோ்வு செய்யப்பட்டுள்ளது. அங்கு கட்டடம் கட்டும் வரை தற்காலிக கட்டடத்தில் இக்கல்லூரி இயங்கும். பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வந்த பின்னா், நிகழாண்டே மாணவிகள் சோ்க்கை நடைபெற்று, வகுப்புகள் தொடங்கும் என்றனா்.
அப்போது, முன்னாள் எம்.எல்.ஏ. பி.ஜி. ராஜேந்திரன், பேரூராட்சி செயல் அலுவலா் கணேசன், ராமகிருஷ்ணா பள்ளித் தாளாளா் சித்ராதேவி உள்பட பலா் கலந்துகொண்டனா்.