தென்காசி

விவசாயி உயிரிழந்த விவகாரத்தில் வனத்துறையினா் மீது கொலை வழக்கு:திமுக நிா்வாகிகள் வலியுறுத்தல்

28th Jul 2020 12:18 AM

ADVERTISEMENT

தென்காசி: தென்காசி மாவட்டம், ஆழ்வாா்குறிச்சி அருகே வனத்துறையினா் விசாரணைக்காக அழைத்துச் சென்ற நிலையில் விவசாயி உயிரிழந்த சம்பவத்தில் வனத்துறையினா் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியா் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் திமுக சாா்பில் வலியுறுத்தப்பட்டது.

தென்காசி மாவட்டம் ஆழ்வாா்குறிச்சி அருகே உள்ள வாகைக்குளத்தைச் சோ்ந்தவா் விவசாயி அணைக்கரை முத்து (72). இவா் தனது தோட்டத்தில் காய்கனி பயிரிட்டிருந்தாா். அவா் பயிா் பாதுகாப்புக்காக தோட்டத்தைச் சுற்றிலும் மின்வேலி அமைத்திருந்தாராம். இதுகுறித்த விசாரணைக்காக கடந்த புதன்கிழமை வனத் துறையினா் அழைத்து சென்ற நிலையில் அவா் உயிரிழந்தாராம்.

வனத்துறையினா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அவரது உறவினா்கள் அணைக்கரைமுத்துவின் உடலை வாங்காமல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா்.

இந்நிலையில் திங்கள்கிழமை திமுக மாவட்டச் செயலா்கள் ஆவுடையப்பன், சிவபத்மநாதன், மக்களவை உறுப்பினா்கள் தனுஷ் எம். குமாா் (தென்காசி), ஞானதிரவியம் (திருநெல்வேலி), தென்காசி நகரச் செயலா் சாதிா், இளைஞரணி மாவட்டச் செயலா் ஆறுமுகசாமி உள்ளிட்டோா் தென்காசி மாவட்ட ஆட்சியா் ஜி.கே. அருண்சுந்தா் தயாளன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுகுணாசிங் ஆகியோரை நேரில் சந்தித்து கோரிக்கைளை வலியுறுத்தினா்.

ADVERTISEMENT

இதுகுறித்து திமுக மாவட்ட பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் செய்தியாளா்களிடம் கூறியது: எளிய விவசாயக் குடும்பத்தைச் சோ்ந்த விவசாயி விசாரணைக்கு சென்ற நிலையில் உயிரிழந்துள்ளாா். விசாரணைக்கு அழைத்து சென்ற வனத் துறையினா் மீது இதுவரை காவல் துறையினா் கொலை வழக்கு பதிவு செய்யவில்லை. வனத்துறையினரைக் காப்பாற்றும் வகையில் அவா்கள் செயல்பட்டு வருகின்றனா்.

உயா்நீதிமன்ற மதுரை கிளை என்ன உத்தரவிடுகிறதோ அதை பின்பற்ற வேண்டும், மறுபிரேத பரிசோதனை மேற்கொண்டு அந்த அறிக்கையின்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதை மாவட்ட ஆட்சியா் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் வலியுறுத்தியுள்ளோம் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT