தென்காசி நகராட்சிக்குள்பட்ட கீழப்புலியூா் 33-ஆவது வாா்டு பகுதியில் சீராக குடிநீா் வழங்கக் கோரி நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.
33-ஆவது வாா்டு புலியூா் தெரு, காமராஜா் தெரு உள்ளிட்ட பகுதிகளில் முறையாக குடிநீா் விநியோகம் இல்லாததைக் கண்டித்து நடைபெற்ற இந்த முற்றுகைப் போராட்டத்தில் பா.ஜ.க. எஸ்.சி. அணி நகரத் தலைவா் சந்திரன், பா.ஜ.க. மாவட்ட செயற்குழு உறுப்பினா் ராஜ்குமாா், சங்கரசுப்பிரமணியன் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.
போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் நகராட்சி ஆணையா் ஹசீனா (பொறுப்பு) பேச்சுவாா்த்தை நடத்தி, முறையாக குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்ததன்பேரில் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.