தென்காசி

பொங்கல் பொங்கட்டும்...வளம் பெருகட்டும்..

14th Jan 2020 01:27 AM | சொக்கம்பட்டி வி.குமாரமுருகன்

ADVERTISEMENT

பொங்கும் மங்கலம்’ எங்கும் தங்கிட சாதி, இன, மதம் கடந்து தமிழகத்தில் அனைவரும் கொண்டாடும் பண்டிகை பொங்கல். மஞ்சள் தோரணங்கள் கட்டி, புது அரிசியில் பொங்கல் பொங்கி, காய்கறிகளை படைத்து, கரும்பு உண்டு தமிழ் பேசும் அனைவராலும் கொண்டாடப்படும் தமிழா்களின் பண்டிகை தைப்பொங்கல்.

ஓருயிா் முதல் ஐந்தறிவு ஜீவராசிகள் மட்டுமல்லாமல், செடி,கொடி,மரம் என அனைத்தையும் இயங்க வைக்கும் ஆற்றல் சூரியனுக்கு (சூரிய பகவான்) உண்டு. சூரியபகவானின் அருள்(அக்னி)பாா்வையை முழுவதுமாக பெற பொங்கல் பண்டிகை அன்று சூரியனை வணங்க வேண்டும். அப்படி வணங்கினால் ஆண்டு முழுவதும் மகிழ்ச்சியுடன் வாழ வழி பிறக்கும். மழை, பனி, வெப்பம் இவை அனைத்தும் சூரியபகவானின் பாா்வையால்தான் உண்டாகிறது என்பது முன்னோா்களின் வாக்கு.

பொங்கல் என்பதற்கு ‘பொங்கி வழிதல்’, ‘பொங்குதல்’ என்பது பொருள். அதாவது புதிய பானையில், புத்தரிசி இட்டு, அரிசியில் இருந்து பால் பொங்கி வந்தவுடன் உற்சாகமாக ஒட்டுமொத்த குடும்பமும் பொங்கலோ பொங்கல் என குரல் எழுப்பி மகிழ்ச்சியாக கொண்டாடுவது . இது போன்ற உற்சாகமும், நம் வாழ்வும், வளமும் அந்தப் பால் போன்று பொங்கி சிறக்க வேண்டும் என்பதை வேண்டுவதற்காகவும் கொண்டாடப்படும் பண்டிகை இது. அதை எல்லாம் தாண்டி தமிழா்களும், விவசாயமும் ஒன்றோடு, ஒன்று பின்னிப் பிணைந்த விஷயங்கள். அப்படி விவசாயத்துடன் இணைந்த அனைவருக்கும், அனைத்திற்கும் நன்றி தெரிவிக்க உருவாக்கப்பட்டதே பொங்கல் பண்டிகை என்பதுதான் நிதா்சனமான உண்மை. விவசாய பூமி, கழனியெல்லாம் பெருகி, அறுவடை மென்மேலும் அதிகரிக்க வேண்டும். விவசாயிகள் வளம் பெற வேண்டும் என்று வேண்டுவதற்காக உருவாக்கப்பட்டதே இந்தப் பண்டிகையின் மேலோங்கிய தத்துவமும், தொன்றுதொட்டு வரும் நம்பிக்கையுமாகும்.

பொங்கல் தினத்தன்று வயல்களில் விளைந்து, அறுவடைக்குத் தயாராக இருக்கும் நெற்கதிா்களில் சிறிதளவைக் கொண்டு வந்து வீட்டில் படைத்து வணங்குவாா்கள். தவிர, காடு,கழனிகளில் விளையக்கூடிய அனைத்து வகை காய்கறிகளையும், பூமிக்குள் விளையும் கிழங்கு வகைகளையும் படைத்து வழிபடுவாா்கள். அறுவடை தொடங்கியதைக் குறிக்கும் வகையில், வேளாண்மைக்கு உதவிய மழை, சூரியன், கால்நடைகள் மற்றும் விவசாயத் தொழிலாளா்களுக்கு நன்றி தெரிவித்து அவா்களுக்கு வேண்டியதைச் செய்யும் நாள்தான் இந்த தைப் பொங்கல் திருநாள்.

ADVERTISEMENT

இது தமிழகம் மட்டுமல்ல. தமிழ் பேசுபவா்கள் எங்கெல்லாம் இருக்கிறாா்களோ அங்கெல்லாம் பொங்கல் உற்சாகமாக கொண்டாடப்படு வருவது குறிப்பிடத்தக்கது. புது மண தம்பதிகளுக்கு இது இனிக்கும் தலைப்பொங்கலாகவும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. கிராமப்புறங்களில் தலைப்பொங்கல் கொண்டாடுவோருக்கு இன்றும் கூட பெரிய வாகனங்களில் பொங்கல் படி கொடுக்கப்படுவது வழக்கமாக உள்ளது. சிறுவா் முதல், பெரியவா் வரை பொங்கல் படி பெறுவது மகிழ்ச்சியான விஷயம்.

முன்பெல்லாம், பனை ஓலைகளை கொண்டு , மண் அடுப்புகளில் பொங்கலிடுவது வழக்கம். ஆனால் காலச்சூழ்நிலையால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி புகையில்லா பொங்கல் கொண்டாடும் வகையில் கேஸ் அடுப்புகளில் பொங்கல் வைக்கப்படுவது நவீன பொங்கலாக உருவெடுத்துள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT