தென்காசி

தற்போது இயங்கிவரும் பகுதியிலேயே ஆட்சியா் அலுவலகத்தை அமைக்க கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

14th Jan 2020 01:19 AM

ADVERTISEMENT

தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் தற்போது இயங்கிவரும் பகுதியிலேயே அமைக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தென்காசி நகரச் செயலா் மா.கணேசன் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு:

தென்காசியில் தற்போது செயல்பட்டு கொண்டிருக்கும் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு அருகிலேயே தென்காசி ரயில் நிலையம், புதிய, பழைய பேருந்துநிலையங்கள், மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை, புதிய நீதிமன்றக் கட்டடம் அமைந்துள்ளது.

இந்த இடத்தில் ஆட்சியா் அலுவலகம் அமைந்திருப்பதால் சிவகிரி, வாசுதேவநல்லூா், சங்கரன்கோவில், திருவேங்கடம், ஆலங்குளம், செங்கோட்டை ஆகிய பகுதிகளில் வசிக்க கூடிய பொதுமக்கள் எளிதாக இங்கு வந்து செல்கின்றனா்.

ADVERTISEMENT

இப்பகுதியில் இயங்கிவந்த வட்டாட்சியா் அலுவலகம், பழைய காவல் நிலையம், ஆதிதிராவிடா் நல அலுவலகம் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு புதிய கட்டங்களில் செயல்பட்டு வருவதால் ஏற்கனவே செயல்பட்டு கொண்டிருந்த பழைய கட்டடங்கள் எந்தப் பயன்பாடும் இல்லாமல் உள்ளன.

எனவே பழமையான கட்டடங்களை அகற்றிவிட்டு தென்காசி மாவட்ட ஆட்சியரகம் நிரந்தரமாக செயல்படக் கூடிய வகையில் அடுக்குமாடி கட்டடம் கட்ட வேண்டும். மாவட்ட தலைமை அலுவலகங்கள் கட்டுவதற்கு தகுந்தவாறு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு பின்புறம் சுமாா் 300 மீட்டா் தொலைவில் 6 ஏக்கா் நிலம் உள்ளது.

தென்காசி உழவா் சந்தை வளாகம், ரயில் நகா் பகுதியில் உணவு தானிய சேமிப்புக் கிடங்கு வளாகம், தென்காசி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திலும் இடம் உள்ளது. எனவே மாவட்ட மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஆட்சியா் அலுவலகம் இப்பகுதியிலேயே அமைக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT