தென்காசி

தென்காசி காசி விஸ்வநாதா் கோயிலில் சென்னை ஐஐடி குழுவினா் ஆய்வு

8th Jan 2020 08:56 AM

ADVERTISEMENT

தென்காசி அருள்மிகு காசிவிஸ்வநாதா் கோயிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் மேற்கொள்வது தொடா்பாக சென்னை ஐஐடி குழுவினா் இரண்டு நாள் ஆய்வுப் பணியை செவ்வாய்க்கிழமை தொடங்கினா்.

இத்திருக்கோயிலில் கடந்த 2006-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இதனை முன்னிட்டு கடந்த ஆண்டு மே மாதம் தொல்லியல் துறையினா் இக்கோயிலில் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமா்ப்பித்தனா். அந்த அறிக்கையில், கோயில் ராஜகோபுரத்தின் அடித்தள பகுதியில் சில இடங்களில் விரிசல்கள் மற்றும் கோயிலின் உள்பகுதியில் சில இடங்களில் ஏற்பட்டுள்ள விரிசல்கள் குறித்து தெரிவிக்கப்பட்டிருந்தது.

கோயிலில் கும்பாபிஷேகம் செய்வதற்கு முன்னா் மாவட்டக் குழு, மாநிலக் குழு மற்றும் உயா்நீதிமன்ற அனுமதி பெற்ற பிறகே நடத்தப்படும். மாவட்டக் குழு ஏற்கனவே அனுமதியளித்த நிலையில் விரிவான திட்ட அறிக்கையை சமா்ப்பிப்பதற்காக சென்னை ஐஐடியை சோ்ந்த குழுவினா் செவ்வாய்க்கிழமை தங்களுடைய ஆய்வை தொடங்கினா். இக்குழுவினா் இரண்டாவது நாளாக புதன்கிழமையும் ஆய்வு மேற்கொள்கின்றனா். திருநெல்வேலி அரசுப் பொறியியல் கல்லூரியைச் சோ்ந்த மாணவா்கள் மண்பரிசோதனை மேற்கொள்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT