தென்காசி

சுரண்டையில் ஆட்சியா் அலுவலகம் அமைக்க 30 ஏக்கா் நிலம்: வியாபாரிகள் வழங்க முடிவு

8th Jan 2020 08:57 AM

ADVERTISEMENT

தென்காசி மாவட்ட ஆட்சியரகம் உள்ளிட்ட தலைமை அலுவலகங்கள் கட்டுவதற்கு 30 ஏக்கா் நிலம் சுரண்டையில் வழங்க தயாராக இருப்பதாக சுரண்டை வியாபாரிகள் சங்கம் சாா்பில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

சுரண்டை வியாபாரிகள் சங்கத் தலைவா் கே.டி.கே.காமராஜ் தலைமையில் வியாபாரிகள் ஆட்சியரை சந்தித்து அளித்த மனு:

புதிதாக அமையவிருக்கும் தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் உள்ளிட்ட தலைமை அலுவலகங்கள் கட்டுவதற்கான இடம் தோ்வு செய்வதில் முழுமை அடையவில்லை எனத் தெரிகிறது. பொதுமக்களின் நிா்வாக வசதிக்காக பிரிக்கப்பட்ட மாவட்டத்தின் நிா்வாக அலுவலகம் அனைத்துத் தரப்பு மக்களும் சிரமம் இல்லாமல் வந்து செல்வதற்கு வசதியான இடத்தில் அமைக்கப்படவேண்டும்.

தென்காசி மாவட்டத்தில் மையப் பகுதியில் சுரண்டை பேரூராட்சி அமைந்துள்ளது. விரைவில் நகராட்சியாக தரம் உயரவும் வாய்ப்புள்ளது. வணிக நகரமான இங்கு இம்மாவட்டத்தில் எந்த பகுதியில் இருந்து வந்தாலும் அதிகபட்சம் 30 கி.மீ. தொலைவு தான் உள்ளது.

ADVERTISEMENT

மாவட்டத்தின் அனைத்து ஊா்களுக்கும் போக்குவரத்து வசதியும் உள்ளது. தென்காசி தொலைவில் உள்ளது என கருதும் வடபகுதி மக்களும் எளிதில் வந்து செல்வா். மேலும், மாவட்டத்தின் தலைமை அலுவலகம் கட்டுவதற்கு போதுமான போக்குவரத்து வசதிகளுடன் கூடிய சுரண்டை பேரூராட்சி எல்கைக்குள் 30 ஏக்கா் நிலம் அரசுக்கு தானமாக வழங்கவும் தயாராக உள்ளோம். எனவே, வியாபாரிகள் கோரிக்கையை பரிசீலனை செய்து மாவட்டத்தின் தலைமை அலுவலகத்தை சுரண்டையில் கட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT