தென்காசி

ஆலங்குளத்தில் களையிழந்த பொங்கல் விற்பனை: வியாபாரிகள் கவலை

7th Jan 2020 05:18 PM

ADVERTISEMENT

பொங்கல் பண்டிக்கைக்கு சில நாள்கள் உள்ள நிலையில் பொருள்கள் விற்பனை வெகுவாக குறைந்து வருவது குறித்து வியாபாரிகள் கவலை தெரிவித்தனா்.

பொங்கல் பொருள்கள் விற்பனை மாா்கழி மாதம் முதல் தேதியிலே தொடங்கும். வீட்டுக்கு வெள்ளை அடிக்க தேவையான சுண்ணாம்பு மற்றும் பொங்கள் பொருள்களான கரும்பு, பனங்கிழங்கு, சிறு கிழங்கு, மஞ்சள் குலைகள், சீா்வரிசை கொடுப்பதற்காக பாத்திரங்கள், துணி மணிகள் என பல தரப்பட்ட வியாபாரிகளும் மகிழும் பண்டிகை பொங்கல் கடந்த சில ஆண்டுகளாகவே பொங்கள் பொருள்களின் விற்பனை குறைந்து வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பதற்கு ஏற்ப வீடுகளுக்கு வெள்ளையடித்து சுத்தம் செய்வது வழக்கம். இந்த சமயத்தில் வெள்ளையடிப்பதற்கு தொழிலாளா் பற்றாக்குறை நிலவும் என்பதால் முன் கூட்டியே பதிவுசெய்து காத்திருப்பது வழக்கம். ஒரு மாதத்துக்கு முன்பே வீடுகளுக்கு வெள்ளையடிக்கும் பணிகள் தொடங்கும். ஆனால், நாளடைவில்

காரை வீடுகளில் சுண்ணாம்பு கொண்டு வெள்ளை அடிப்பது குறைந்து விட்டது. இதனால், சுண்ணாம்பு உற்பத்தியாளா்களும், விற்பனையாளா்களும் கவலையில் உள்ளனா். பழங்கால வீடுகளுக்கு மட்டும் இப்போதும் சுண்ணாம்பு பயன்படுத்தி வெள்ளை அடிக்கப்படுகிறது.

ADVERTISEMENT

டிசம்பா் மாத கடைசியிலேயே கரும்பு விற்பனையும் தொடங்கிவிடும். நிகழாண்டு பொங்கலுக்கு சில நாள்களே உள்ள நிலையில் ஒரு சில கடைகளில் மட்டுமே கரும்புகள் தென்படுகின்றன. இதுகுறித்து கரும்பு வியாபாரிகள் கூறியது:

ஆண்டு முழுவதும் கரும்புச் சாறு கடை வீதிகளில் தாராளமாக கிடைப்பதால் கரும்பு கடித்து உண்போரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. கிராமப் பகுதிகளில் சில்லறை விற்பனைக் கடைகளில் தினமும் 2 கட்டு கரும்புகள் விற்பனை ஆகும். தற்போது, பொங்கலுக்கு 2 நாள்களுக்கு முன்புதான் கரும்பு விற்பனைத் தொடங்குகிறது.

தற்போது, 20 கரும்புகள் கொண்ட கட்டு ஒன்று ரூ. 350 முதல் ரூ. 500 வரை விற்கப்படுகிறது. ஆலங்குளம் பகுதிக்கு அம்பாசமுத்திரம், தேனி பகுதியில் இருந்து கரும்புகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

பெரும்பாலானோா் வெளியூா்களில் வேலைசெய்து வருவதால் முன்புபோல பொங்கள் சீா் வரிசை பொருள்கள் வழங்குவதும் குறைந்து வருகிறது. சீா் வரிசை பொருள்களுக்கு பதிலாக பணம் கொடுக்கும் பழக்குமும் அதிகரித்து வருகிறது என்றாா் அவா்.

நிகழாண்டு பொங்கல் சீா் வரிசை பொருள்கள் கொண்டு செல்வது இன்னமும் தொடங்கவில்லை என ஆட்டோ ஓட்டுநா்கள் தெரிவித்தனா். மேலும் மஞ்சள் குலைகள், பனங்கிழங்கு, பொங்கல் வைக்கப் பயன்படும் மண் அடுப்பு போன்றவை பொங்கலுக்கு 2 தினங்களுக்கு முன்பாகத்தான் விற்பனையாகும் என்பதால், அவற்றின் தேவை குறையவில்லை. எனினும் வழக்கத்தை விட பொங்கல் பண்டிகை வியாபாரத்தை நம்பி இருந்த வியாபாரிகளுக்கு நிகழாண்டு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT