தென்காசி: தென்காசி மாவட்ட வாா்டு மறுவரையறை கருத்து கேட்புக் கூட்டம் குற்றாலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையாக கொண்டு தயாா் செய்யப்பட்டுள்ள தென்காசி மாவட்டத்தில், 5 நகராட்சிகளில் உள்ள 153 வாா்டுகள், 18 பேரூராட்சிகளில் உள்ள 278 வாா்டுகள், 10 ஊராட்சி ஒன்றியங்களில் அடங்கிய 1905 கிராம ஊராட்சி வாா்டுகள் மற்றும் 144 ஊராட்சிஒன்றிய வாா்டுகள், 14 மாவட்ட ஊராட்சி வாா்டுகளின் மறுவரையறை குறித்து பிப்.22ஆம் தேதி வரை மனுக்கள் பெறப்பட்டன.
கோரிக்கைகளின் மீது விவாதித்து முடிவு செய்யும் வகையில் பொதுமக்கள், அரசியல் கட்சிகளின் கருத்து கேட்புக் கூட்டம் குற்றாலத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ஜி.கே.அருண்சுந்தா் தயாளன் தலைமை வகித்தாா்.
இதில், திமுக மாவட்ட பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன், கடையநல்லூா் எம்.எல்.ஏ. முகம்மதுஅபூபக்கா், மதிமுக மாவட்டச் செயலா் தி.மு.ராசேந்திரன், காங்கிரஸ் மாவட்டத் தலைவா் பழனிநாடாா் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.
கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த பெரும்பாலானோா் வாா்டு சீரமைப்பில் அதிகளவில் குளறுபடிகள் உள்ளதாகவும், கடையநல்லூா், தென்காசி, புளியங்குடி, குருவிகுளம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் அதிகளவில்
குளறுபடிகள் உள்ளதாகவும் தெரிவித்தனா். கடந்த காலங்களில் 3 ஆயிரம் வாக்குகள் இருந்த வாா்டு பகுதியில் தற்போது வெறும் 400 வாக்குகள் மட்டுமே உள்ளதாகவும் தெரிவித்தனா்.