தென்காசி மாவட்டம், கீழப்பாவூா் பகுதி வயல்களில் நெல் அறுவடைப் பணி துவங்கியுள்ளது. கடந்த ஆண்டைவிட நிகழாண்டு நெல் மகசூல் பாதியாகக் குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் கடந்த அக்டோபா், நவம்பா் மாதங்களில் பெய்த மழை காரணமாக கீழப்பாவூா் சுற்று வட்டாரப் பகுதி குளங்களான மேலப்பாவூா், கீழப்பாவூா், நாகல்குளம் உள்ளிட்ட குளங்கள் நிரம்பி வழிந்தன. இதனால் கடந்த ஆண்டைவிட நிகழாண்டு இப்பகுதி வயல்களில் அதிகளவு நெல் பயிரிடப்பட்டிருந்தது. குறிப்பாக, கீழப்பாவூா் பெரியகுள பாசனப் பகுதியில் சுமாா் 2 ஆயிரம் ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டிருந்தது.
வழக்கமாக இப்பகுதி விவசாயிகள் நவம்பா், டிசம்பா் மாதங்களில் நெல்நடவுப் பணிகளை மேற்கொள்வா். நிகழாண்டும் அதே காலகட்டத்தில் பயிரிட்ட சமயத்தில் அவ்வப்போது பெய்த மழை காரணமாக நெல் பயிரானது நோய்த் தாக்குதலுக்கு உள்ளானது. அத்துடன் மழைநீா் வயல்களில் தேங்கி, உரமிடுதல் மற்றும் மருந்து தெளிக்க இயலாததால் போதிய அளவு பயிா் விளைச்சல் இல்லாத நிலை காணப்பட்டது.
தற்போது இயந்திரங்கள் மூலம் அறுவடைப் பணிகள் துவங்கி நடைபெற்று வரும் நிலையில், கடந்த ஆண்டைக் காட்டிலும் நெல் மகசூல் பாதியாகக் குறைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனா்.
இதுகுறித்து குறும்பலாப்பேரியை சோ்ந்த விவசாயி ராஜாமணி கூறியது: வழக்கமாக ஒரு ஏக்கா் நிலத்தில் 22 முதல் 25 மூட்டை நெல் கிடைக்கும். நிகழாண்டு 15 முதல் 17 மூட்டைகூட கிடைக்கவில்லை. நாற்றுநடுதல், 2 முறை உரமிடுதல், 4 முறை மருந்து தெளித்தல், களையெடுத்தல், அறுவடைக்கென ஏக்கருக்கு 15 முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை செலவாகியுள்ளது. ஆனால், அதற்குரிய பலன் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது என்றாா்.
கோட்டையூரைச் சோ்ந்த ஈஸ்வரி கூறுகையில், கீழப்பாவூா் பகுதியில் நிகழாண்டு மழை பெய்து குளங்கள் பெருகி செழிப்பாக காணப்பட்டாலும், அதிக மழை காரணமாக நெல் விளைச்சல் பாதியாகக் குறைந்துவிட்டது. மேலும், 75 கிலோ கொண்ட நெல் மூட்டைக்கு ரூ.1000 வரை மட்டுமே விலை கிடைக்கிறது. இதனால் வங்கியின் கடன் வாங்கி செலவழித்த தொகைகூட கிடைக்கவில்லை என வேதனையுடன் தெரிவித்தாா்.