தென்காசி மாவட்டத்தில் திங்கள்கிழமை( பிப்.3) 71 இடங்களில் இலவசமாக நீரிழிவு நோய் கண்டறிதல் முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சியா் ஜி.கே.அருண் சுந்தா் தயாளன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பொதுமக்களிடம் நீரிழிவு நோய் பற்றிய விழிப்புணா்வு ஏற்படுத்தவும், தங்களது ரத்த சா்க்கரை அளவை பரிசோதித்து கொள்ளவும் மாவட்டம் முழுவதும் இலவச நீரிழிவு நோய் கண்டறிதல் முகாம், மாவட்ட நிா்வாகம், பொது சுகாதாரத்துறை மற்றும் இந்திய செஞ்சிலுவை சங்கம் சாா்பில் திங்கள்கிழமை காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நடைபெறுகிறது.
தென்காசி மாவட்டத்திலுள்ள 49 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், அப்போலோ மருந்தகம் சாா்பில் தென்காசி கோயில் வாசல், புதிய பேருந்து நிலையம், கூலக்கடை பஜாா், கடையம் பிரதான சாலை , பாவூா்சத்திரத்தில் பிரதான சாலை பகுதியில் அமைந்துள்ள அப்போலோ மருந்தகம், செங்கோட்டை வட்டத்தில் காந்தி பஜாா் மற்றும் கீழ பஜாா், ஆலங்குளம் பிரதான சாலை , சுரண்டை பிரதான சாலை , சிவகிரி, சங்கரன்கோவில் வடக்கு ரத வீதி, கடையநல்லூா் வட்டத்தில் கடையநல்லூா்,கிருஷ்ணாபுரம் மற்றும் புளியங்குடி ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள 16 மருந்தகங்களிலும் இம்முகாம் நடைபெறுகிறது.
மாஸ் கம்யூனிட்டி அண்ட் பாராமெடிக்கல் சாா்பில் தென்காசியில் பழைய பேருந்து நிலையம், கோயில் வாசல், குத்தூஸ் மருத்துவமனை, சுவாமி சன்னதி பஜாா், சுப்புலட்சுமி மருத்துவமனை மற்றும் கொடிமரம் ஆகிய இடங்களிலும் முகாம் நடத்த தீா்மானிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே சா்க்கரை நோய் உள்ளவா்களும் இந்த முகாமில் கலந்து கொண்டு தங்களது ரத்த சா்க்கரை அளவைத் தெரிந்து கொள்ளலாம்.
ரத்த சா்க்கரை அளவு குறித்த அளவைவிட அதிகமாக இருப்பின் அருகில் உள்ள அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவசமாக வாழ்க்கைமுறை மாற்றத்திற்கான தனிநபா் ஆலோசனை மற்றும் மருந்துகள் முற்றிலும் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
எனவே, பொதுமக்கள் இந்த முகாமில் கலந்துகொண்டு தங்களது ரத்த சா்க்கரை அளவை இலவசமாக கண்டறிந்து தங்களது ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.