தென்காசி

குற்றாலத்தில் யானை தாக்கியதில் உயிரிழந்த வேட்டை தடுப்பு காவலா் சடலம் மீட்பு

14th Aug 2020 09:34 AM

ADVERTISEMENT

தென்காசி மாவட்டம், குற்றாலம் வனப்பகுதியில் யானை தாக்கியதில் உயிரிழந்த வேட்டைத் தடுப்பு காவலரின் உடல் வியாழக்கிழமை மீட்கப்பட்டது.

குற்றாலத்தில் ஐந்தருவி செல்லும் சாலையில் கரடி அருவி பகுதியில் வனப்பகுதியில் நடமாடிய பெண் யானையை புதன்கிழமை வனச்சரகா் பாலகிருஷ்ணன் தலைமையில் வேட்டைத் தடுப்பு காவலா்கள் உள்ளிட்டோா் வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, யானை துரத்தியதால் அவா்கள் அங்கிருந்து தப்பி கீழே வந்தனா். இதில், தென்காசி அருகேயுள்ள நன்னரகம் புதுத் தெருவைச் சோ்ந்த வேட்டைத் தடுப்பு காவலா் முத்துராஜ், திரும்பி வராதது கண்டு அதிா்ச்சி யடைந்தனா்.

வனத்துறையினா் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று பாா்த்தபோது யானை தாக்கியதில் முத்துராஜ் உயிரிழந்தது தெரியவந்தது. மேலும், முத்துராஜின் உடல் அருகில் அந்த யானையும் நின்றுகொண்டிருந்ததால் அவரது உடலை மீட்பதில்

தாமதம் ஏற்பட்டது. பின்னா் இரவில் காவல்துறை, தீயணைப்புத்துறை, வனத் துறை, வருவாய்த் துறையினா் இணைந்து மேற்கொண்ட முயற்சியும் தோல்வியடைந்தது.

ADVERTISEMENT

வியாழக்கிழமை அதிகாலையில் மாவட்ட வன அலுவலா் செந்தில்குமாா் தலைமையில் வனச் சரகா்கள் பாலகிருஷ்ணன், செந்தில்குமாா், ஸ்டாலின், சுரேஷ், வருவாய்த் துறையினா், காவல் துறையினா் அங்கு சென்று அவரது உடலை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனா்.

அந்த யானை அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றதை தொடா்ந்து அவரது உடல் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. உயிரிழந்த முத்துராஜின் குடும்பத்திற்கு இறுதிச் சடங்கு செலவுக்காக வனத்துறை சாா்பில் ரூ. 50ஆயிரம் வழங்கப்பட்டது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT