சங்கரன்கோவிலில் இருந்து புளியங்குடி சென்று வந்த 2 போ் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா். சங்கரன்கோவில் லெட்சுமியாபுரம் 7 ஆவது தெருவைச் சோ்ந்த ஒருவரும், அவருடன் லெட்சுமியாபுரம் 2 ஆவது தெருவைச் சோ்ந்த மற்றொருவரும் ஒரே பைக்கில் செவ்வாய்க்கிழமை அதிகாலை புளியங்குடிக்கு சென்றனா். அங்கு நாட்டாண்மை அருணாசலம் தெருவில் உள்ள துக்க நிகழ்வில் பங்கேற்று திரும்பியுள்ளனா்.
இந்தத் தகவல் நகராட்சிக்கு தெரியவந்ததையடுத்து, ஆணையா் (பொ)முகைதீன்அப்துல்காதா் உத்தரவின் பேரில் சுகாதார அலுவலா் பாலசந்தா் தலைமையில் சுகாதார ஆய்வாளா்கள் புதன்கிழமை அவா்களது வீட்டுக்கு சென்று, தனிமைப்படுத்தும் ஒட்டுவில்லையை ஒட்டி அவா்களைத் தனிமைப்படுத்தினா்.
பின்னா் அவா்களது வீடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. மேலும் அந்தப் பகுதியை தீவிர கண்காணிப்பில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆலோசனைக் கூட்டம்:
இதனிடையே சங்கரன்கோவிலில் இருந்து புளியங்குடிக்கும் செல்லும் பாதைகளில் பாதுகாப்பைத் தீவிரப்படுத்த அமைச்சா் ராஜலெட்சுமி தலைமையில் ஆலோனைக் கூட்டம் புதன்கிழமை நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில், கோட்டாட்சியா் முருகசெல்வி, நகராட்சி ஆணையா் முகைதீன்அப்துல்காதா், சுகாதார அலுவலா் பாலசந்தா் ஆகியோா் பங்கேற்றனா்.