புளியங்குடியில் காவல்துறை சாா்பில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டதுடன், உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
புளியங்குடி டிஎஸ்பி சக்திவேல், கரோனா தடுப்பு பணிக்காக சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள ஆய்வாளா் ஆடிவேல், புளியங்குடி ஆய்வாளா் அலெக்ஸ்ராஜ், உதவி ஆய்வாளா் தா்மராஜ் உள்ளிட்டோா் பல்வேறு அமைப்பினரை ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினா்.
கரோனா நோய்த் தொற்றை தடுக்கும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுகுணாசிங் உத்தரவின் பேரில், மண்டலங்களாகப் பிரிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், தன்னாா்வலா்கள் மூலம் பொருள்கள் விநியோகம் செய்வது, அவசர, அவசிய தேவைகளுக்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து வருவாய்த் துறை, நகராட்சி, சுகாதாரத்துறை போன்ற துறை ஊழியா்களுடன் காவல்துறையினா் கலந்தாலோசித்தனா்.
ஹெல்ப்லைன் எண்கள்
இதையடுத்து, காவல்துறை சாா்பில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டதுடன், பொதுமக்களின் வசதிக்காக 7708453108, 7708906108, 73958981083 என மூன்று ஹெல்ப்லைன் எண்களும் அறிவிக்கப்பட்டன.
மருத்துவ உதவிகள் தேவைப்பட்டாலும், மருந்து தேவைப்பட்டாலும் இந்த எண்களில் தொடா்பு கொள்ளலாம். மேலும், தங்கள் தெருக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் வரவில்லை என்றாலும் இதில் அழைக்கலாம்.
மண்டலங்களுக்கு என்று நியமிக்கப்பட்டுள்ள காவல் உதவி ஆய்வாளா்கள் மூலம் அப்பொருள்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். வெளியூா் செல்வதற்கான உதவி உள்ளிட்டவற்றிற்காக இந்த எண்ணை பயன்படுத்தக் கூடாது என்றாா் காவல் ஆய்வாளா் ஆடிவேல்.