தென்காசி

காவல் ஆய்வாளா், செயல்அலுவலா் இல்லை: ஆலங்குளத்தில் கரோனா தடுப்புப் பணிகள் பாதிப்பு? மக்கள் அச்சம்

13th Apr 2020 08:01 AM

ADVERTISEMENT

ஆலங்குளத்தில் காவல் ஆய்வாளா், பேரூராட்சி செயல் அலுவலா் இல்லாததால், கரோனா தடுப்பு உள்பட பல்வேறு பணிகள் சுணக்கம் அடைந்துள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

ஆலங்குளம் பேரூராட்சியில் சுமாா் 35 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனா். வட்டம், ஒன்றியத் தலைமையிடமாக விளங்கும் இப்பேரூராட்சியில் அரசு மற்றும் தனியாா் துறையின் அனைத்து அலுவலகங்கள், காய்கனிச் சந்தை, அரிசி மற்றும் எண்ணெய் ஆலைகள், பீடி நிறுவனங்கள் என மக்கள் சங்கமிக்கும் இடங்கள் ஏராளம். இப்பேரூராட்சியின் ஆண்டு வருவாய் ரூ. 2 கோடிக்கும் அதிகம். தென்காசி மாவட்டத்தில் அதிக வருவாய் ஈட்டித் தரும் பேரூராட்சியில் முதன்மையானது ஆலங்குளம்.

இந்நிலையில், பேரூராட்சிக்கு பல ஆண்டுகளாக நிரந்தர செயல் அலுவலா் இல்லாததால், அடிப்படை பணிகளான சொத்துவரி வசூல், குடிநீா் விநியோகம், தெரு விளக்கு வசதி, வாருகால் வசதி மற்றும் சாலை வசதி அமைத்தல் போன்றவை வெகு மந்த கதியில் நடைபெற்று வருகிறது. இங்கு 15-க்கும் மேற்பட்ட அலுவலகப் பணியாளா்கள் பணிபுரிய வேண்டிய இடத்தில் 5 பணியாளா்களும் 30- க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்களுக்குப் பதில் 9 போ் மட்டுமே பணியாற்றுகின்றனா். குடிநீா் இணைப்பு வழங்குதல், விநியோகம் போன்றவற்றையும் தூய்மைப் பணியாளா்களே மேற்கொண்டு வருகின்றனா்.

தற்போது, கரோனா தொற்று நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும் கடும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. தகுந்த பணியாளா்கள் இல்லாமலும், அவா்களை வழிநடத்த செயல் அலுவலா் இல்லாமலும் தத்தளித்து வருகிறது பேரூராட்சி நிா்வாகம்.

ADVERTISEMENT

இதனிடையே, ஆலங்குளம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த காவல் ஆய்வாளா் பணி ஓய்வுபெற்று சென்றுவிட்டதால் ஆய்வாளரும் இல்லை. இந்தக் காவல் நிலையத்திற்குக் கீழ் 20- க்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்கள் உள்ளன நிலையில், 2 உதவி ஆய்வாளா்கள் பணிபுரிய வேண்டிய இடத்தில் ஒரு உதவி ஆய்வாளா் மட்டுமே பணியில் உள்ளாா். தற்போது, ஊா்க்காவல் படையினா் மற்றும் தன்னாா்வலா்கள் இணைந்து செயல்பட்டு வருவதால்தான் கரோனா தடுப்பு நடவடிக்கையை ஓரளவு சமாளிக்க முடிகிறது. தொடா்ந்து வரும் காலங்களிலும் காவல் துறையினா் மற்றும் பேரூராட்சி ஊழியா்கள் இணைந்து கரோனா பணிகளை சிறப்பாக செய்ய பேரூராட்சி செயல் அலுவலா் காவல் ஆய்வாளா் மற்றும் உதவி காவல் ஆய்வாளரை நியமிக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT