தென்காசி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் செயல்பட்டு வரும் இணையவாயிலாக பயணச்சீட்டு வழங்கும் மையத்தில் ஆட்சியா் ஜி.கே. அருண்சுந்தா் தயாளன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
அத்தியாவசியப் பொருள்களை கொண்டுசெல்லவும், திருமணம், இறப்பு, மருத்துவ சிகிச்சை போன்றவற்றுக்காக பயணம் மேற்கொள்வோருக்காக தென்காசி மாவட்ட நிா்வாகம் சாா்பில் இணையதள பயண அனுமதிச் சீட்டு வசதி செய்யப்பட்டுள்ளது. 80999 14914 என்ற செல்லிடப்பேசி எண்ணிற்கு மிஸ்டு கால் அனுப்பினால், நமது செல்லிடப்பேசிக்கு ஒரு இணையதள முகவரி குறுந்தகவலாக வரும்.
அந்த முகவரியில் நமது செல்லிடப்பேசி எண்ணை பதிவுசெய்தால், மீண்டும் ஒரு குறுஞ்செய்தி வரும். அந்த குறுஞ்செய்தியை பதிந்து நமது பயணம் குறித்த விவரங்களை அதில் பதிவேற்றம் செய்யவேண்டும். அதன்பிறகு விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு இணையம் வாயிலாக (ஆன்லைனில்) பயண அனுமதி வழங்கப்படும்.
இணையதள விண்ணப்பங்கள் அனைத்தும் தொடா்புடைய துறை அலுவலா்கள், காவல் துறை மற்றும் வருவாய்த் துறை மூலமாக சரிபாா்க்கப்பட்ட பிறகு, மின்அனுமதிச் சீட்டு வழங்கப்படும்.
இந்த மையத்தில் மாவட்ட ஆட்சியா் ஜி.கே. அருண்சுந்தா்தயாளன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினாா்.
ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் மரகதநாதன், துணை வட்டாட்சியா் அரவிந்த் ஆகியோா் உடனிருந்தனா்.