திருமங்கலம்- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் ரூ. 10 கோடி மதிப்பில் சந்திப்புப் பகுதிகளை மேம்படுத்தும் பணிகள் விரைவில் தொடங்கும் என நெடுஞ்சாலைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
கடையநல்லூா் அரசு மருத்துவமனைப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, அப்பகுதியிலுள்ள 10 மீட்டா் அலமுள்ள பாலத்தை 16 மீட்டா் அகலமுள்ள பாலமாக மாற்றும் பணியும், ஸ்ரீவில்லிப்புத்தூா், சிவகிரி, வாசுதேவநல்லூா், கடையநல்லூா், செங்கோட்டை பிரானூா் ஆகிய பகுதிகளில் உள்ள வளைவுகளையும் சந்திப்புப் பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 10 கோடி மதிப்பில் விரிவாக்கம் செய்வதற்காக ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு முடிவு செய்யப்பட்டு விட்டது.
மழைக்காலம் காரணமாக பணிகள் தொடங்கப்படவில்லை. மழை பொழிவு முடிந்துள்ள நிலையில், ஜனவரி மாதத்தில் பணிகள் தொடங்கும்.
ஏற்கெனவே, மழையால் சேதமுற்ற தேசிய நெடுஞ்சாலை சீரமைக்கப்பட்டு வருகிறது. புதிய சாலை அமைப்பதற்காக ரூ. 50 கோடியில் கருத்துரு தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு மாத்திற்குள் புதிய சாலைப் பணிகள் தொடங்கும் என நெடுஞ்சாலைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.