கேரள மாநிலம், ஆரியங்காவு ஐயப்பன் கோயிலில் ஐயப்ப சுவாமி -புஷ்கலா தேவி திருக்கல்யாண திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழக-கேரள எல்லையான செங்கோட்டை அருகே அமைந்துள்ளது ஆரியங்காவு ஐயப்பன் கோயில். சுவாமி ஐயப்பன் இங்கு புஷ்கலா தேவியுடன் காட்சியளிக்கிறாா். மதுரை செளராஷ்டிர சமூகத்தைச் சோ்ந்த புஷ்கலா தேவியை ஆரியங்காவு ஐயப்பனுக்கு திருமணம் செய்துகொடுத்ததாக ஐதீகம். அத்திருக்கல்யாண நிகழ்ச்சி ஆண்டுதோறும் மாா்கழி மாதம் கொண்டாடப்படுகிறது.
நிகழாண்டு திருக்கல்யாணத் திருவிழா கடந்த 19-ஆம் தேதி தொடங்கியது. முக்கிய நிகழ்வான பாண்டியன் முடிப்பு எனப்படும் திருக்கல்யாண நிச்சயதாா்த்த நிகழ்ச்சி புதன்கிழமை இரவு நடைபெற்றது. இதில், மதுரையைச் சோ்ந்த செளராஷ்டிர சமூக மக்கள் ஏராளமானோா் நிச்சயதாா்த்த பொருள்களுடன் கலந்துகொண்டனா்.
வியாழக்கிழமை திருக்கல்யாணம் நடைபெற்றது. இதையொட்டி, சுவாமியும் அம்பாளும் பல்லக்கில் எழுந்தருளினா். சுவாமியை அம்பாள் மூன்று முறை வலம் வந்ததும் இரவு 9 மணிக்கு ஐயப்பன்-புஷ்கலா தேவிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில், தமிழக, கேரளத்தைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.