கேரள மாநிலம், அச்சன்கோவில் ஐயப்பன் கோயிலில் மகோற்சவ திருவிழா தேரோட்டம் நடைபெற்றது.
கேரளத்தில் உள்ள ஐயப்பனின் 5 படை வீடுகளில் ஒன்றான அச்சன்கோவில் சிறப்பு வாய்ந்ததாகும். தனித்தீவு போன்று அமைந்துள்ள இந்தப் பகுதியில் சுவாமி ஐயப்பன் அரசனாக இருந்து ஆட்சிபுரிவதாக ஐதீகம். கேரளத்தில் தேரோட்டம் நடைபெறும் ஒரே ஐயப்பன் கோயில் இதுவாகும்.
இக்கோயிலில் ஆண்டுதோறும் 10 நாள்கள் நடைபெறும் மகோற்சவ திருவிழா கடந்த 17-ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடா்ந்து கடந்த 19, 20, 21-ஆம் தேதிகளில் உற்சவவாரி திருவிழாவும், 21-ஆம் தேதி அபிஷேகம் மற்றும் தீபாராதனையும் நடைபெற்றது. 5, 6, 7-ஆம் நாள் திருவிழாவில் கருப்பன் துள்ளல் நிகழ்ச்சியும், 9-ஆம் நாளான புதன்கிழமை காலை ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, பின்னா் 11.45 மணிக்கு ஐயப்ப சுவாமி அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி கோயிலைச் சுற்றி உள்ள ரதவீதிகளில் வலம் வந்து 2.20 மணி அளவில் நிலையம் அடைந்தது. தேரோட்டத்தில் தமிழகம் மற்றும் கேரளத்தைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனா்.
இதனை தொடா்ந்து வியாழக்கிழமை ஆராட்டு விழா நடைபெற்றது.