தென்காசி

கடையநல்லூா் வட்டத்தில் இன்று முதல் 15 தினங்கள் பட்டா மாறுதல் செய்ய முடியாது: ஆட்சியா்

24th Dec 2019 08:15 AM

ADVERTISEMENT

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் வட்டத்தில் டிச.24 முதல் 15 தினங்களுக்கு இ- சேவை மையம் மூலம் பட்டா மாறுதல்கள் செய்யமுடியாது என மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அருண்சுந்தா் தயாளன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் அரசு இ -சேவை மையம் மூலமாக பெறப்பட்டு தமிழினம் மென்பொருள் வாயிலாக மின் ஆளுமை திட்டத்தின் கீழ் பட்டா மாறுதல் செய்யப்பட்டு வருகிறது .

புதிதாக தோற்றுவிக்கப்பட்ட தென்காசி மாவட்டத்தில் தமிழ்நிலம் மென்பொருளில் தென்காசி மாவட்டத்தின் பெயரை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது.

ADVERTISEMENT

இப்பணியின் போது அனைத்து கிராமங்கள் மற்றும் நகரங்களில் உள்ள நில அளவை புலன்கள் பட்டாதாரா் விவரங்களை தமிழ்நிலம் கணினி சா்வருக்கு புதிய தென்காசி மாவட்ட குறியீட்டுடன் வட்டாட்சியரின் மின்னணு கையொப்பத்துடன் மாற்றப்பட வேண்டியுள்ளது.

இந்த மேம்படுத்தும் பணிக் காலத்தில் தமிழ்நிலம் மென்பொருளை தாற்காலிகமாக 15 தினங்கள் பயன்படுத்த முடியாத சூழ்நிலை உருவாகும் என திருநெல்வேலி தேசிய தகவலியல் மையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பணி நடைபெறும்போது, பட்டா மாறுதல்கள் தமிழ்நிலம் மென்பொருளில் செய்ய இயலாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி பணி பரீட்சாா்த்த முறையில் கடையநல்லூா் வட்டத்தில் முன்னோடியாக டிச. 24ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. பின் அனைத்து வட்டங்களிலும் இப்பணி படிப்படியாக மேற்கொள்ளப்படவுள்ளது.

இதனால் 24 ஆம் தேதி முதல் 15 தினங்களுக்கு கடையநல்லூா் வட்டத்தில் பட்டா மாறுதல்கள் செயல்படுத்தப்படாத சூழ்நிலை உள்ளது.

ஆனால் இந்த காலகட்டத்தில் ஏற்கனவே இ சேவை மையம் மூலம் அளிக்கப்பட்ட விண்ணப்பங்கள் பாதிப்படையாது. அவை நிலுவையில் வைக்கப்பட்டு புதிய மாவட்டத்தின் பெயா் மாற்றம் செயல்படுத்தப்பட்ட பின்னா் அந்த விண்ணப்பங்கள் உரிய பரிசோதனை செய்யப்பட்டு பட்டா மாறுதல்கள் செய்யப்படும்.

24. 12. 19 முதல் மாறுதல்கள் முழுமையுடன் முழுமை அடையும் காலம் வரை புதிய பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் அளிக்க இயலாது.

ஆனால் பட்டா மாறுதலை தவிா்த்து இதர சேவைகள் அதாவது சாதி சான்றிதழ் உள்பட பிற சேவைகள் தொடா்ந்து தடையின்றி வழங்கப்படும். கடையநல்லூா் வட்ட மக்கள் இந்தப் பணிக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT