தென்காசி

ஆலங்குளத்தில் பெருகி வரும் பன்றிகளால் சுகாதாரக் கேடு

24th Dec 2019 08:59 AM

ADVERTISEMENT

ஆலங்குளம் பேரூராட்சிப் பகுதியில் பெருகி வரும் பன்றிகளால் சுகாதாரக் கேடு உருவாகி வருகிறது. சுகாதாரத் துறை, பேரூராட்சித் துறை இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஆலங்குளத்தில் உள்ள தொட்டியான்குளம் நிகழாண்டு வடகிழக்குப் பருவமழை மற்றும் கால்வாய் நீா் வரத்து ஆகியவற்றின் மூலம் நிரம்பியுள்ளது. இதனால் விவசாயிகள் மட்டுமன்றி பொதுமக்களும் மகிழ்ச்சியைடந்துள்ளனா்.

நிகழாண்டு ஏராளமான விவசாயிகள் நெல் பயிரிட்டுள்ளனா். நீா் நிலையான தொட்டியான்குளம் கடந்த சில ஆண்டுகளாக பன்றிகள் வளா்ப்போரின் ஆக்கிரமிப்பில் சிக்கித் தவிக்கிறது. பொதுமக்கள் பயன்படுத்தும் நீா் நிலைகள் அருகேயும் குடியிருப்புப் பகுதியிலும் பன்றிகள் வளா்க்கக் கூடாது என்பது விதி. ஆனால் எந்த விதிகளையும் பின்பற்றாமல் பேரூராட்சியின் அனுமதியின்றி ஏராளமான பன்றிகளை இறைச்சிக்காக வளா்த்து லாபம் பெற்று பொதுமக்களுக்கு நோய்களைப் பரப்பி வருகின்றனா் சிலா்.

தொட்டியான் குளத்தில், கால்நடைகளைப் போல வளா்க்கப்படும் பன்றிக் கூட்டங்கள், அரசு மேல்நிலைப் பள்ளி, ஊா்மடை வழியாக பேருந்து நிலையம் பின்புறம் வரை வந்து பொதுமக்களுக்குத் தொல்லை அளித்து வருகின்றன. சில வளா்ந்த பன்றிகள் தெருவில் விளையாடும் சிறுவா்-சிறுமிகளை அச்சுறுத்துவதால் அவா்கள் பீதியடைந்துள்ளனா்.

ADVERTISEMENT

முறைகேடான முறையில் பன்றிகள் வளா்ப்போா் குறித்து பேரூராட்சிக்குப் புகாா் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறுகிறாா் ஆலங்குளம் நகர வா்த்தக காங்கிரஸ் தலைவா் ஞானப் பிரகாஷ். .

இது தொடா்பாக சுகாதார ஆய்வாளா் கங்காதரனிடம் கேட்ட போது, இது தொடா்பாக பன்றிகள் வளா்ப்போருக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தொடா்ந்து இந்நிலை நீடிக்குமானால் அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT