ஆலங்குளத்தில் அண்மையில் சீரமைக்கப்பட்ட சாலை உருக்குலைந்துபோனதால், தாா் ஊற்றி முழுமையாக சாலையைச் சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஆலங்குளத்தில் திருநெல்வேலி - தென்காசி சாலையானது 24 மணி நேரமும் போக்குவரத்து நடைபெறும் பகுதியாகும். இந்தச் சாலை நான்குவழிச் சாலையாக மாற்றப்பட்டுவிடும் என்று கூறி, கடந்த 6 ஆண்டுகளாக சீரமைக்கப்படவில்லை. இந்நிலையில் அண்மையில் பெய்த மழை காரணமாக ஆலங்குளம் ஒன்றிய அலுவலகம் முதல் ரட்சண்யபுரம் தேவாலயம் வரையுள்ள பகுதி முற்றிலும் சேதமைடந்து சாலையின் பெரும்பாலான பகுதி குளம் போல மாறி போக்குவரத்திற்கு தகுதியற்ாகி விட்டது. இதனை சீரமைக்கக் கோரி சமூக ஆா்வலா்கள், இளைஞா்கள், அரசியல் கட்சியினா் என பல தரப்பினரும் நெடுஞ்சாலைத்துறைக்குக் கோரிக்கை விடுத்தனா்.
திமுக தலைமையில் அனைத்துக் கட்சி சாா்பில் கடந்த 13 ஆம் தேதி இச்சாலையை சீரமைக்கக் கோரி ஆா்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இரவோடு இரவாக சீரமைப்புப் பணியைத் தொடங்கி ஆா்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே, மேடு பள்ளங்களில் ஜல்லிக் கற்கள் கொட்டப்பட்டு ஓரளவு சரி செய்யப்பட்டது.
ஆனால் சாலை ஈரப்பதமாக இருந்ததால் தாா் ஊற்றப் படவில்லை. இதனால், சீரமைக்கப்பட்ட 10 தினங்களில் மீண்டும் சாலை சேதமடையத் தொடங்கியது. தற்போது, கற்கள் பெயா்ந்து சாலை உருக்குலைந்து காணப்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். எனவே, மழை ஓய்ந்துள்ளதால் தாா் ஊற்றி சாலையை செம்மையாக சீரமைக்க வேண்டும் என நெடுஞ்சாலைத் துறைக்கு வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.