சிவகிரியில் பேருந்தும் மொபெட்டும் மோதிக்கொண்டதில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.
வாசுதேவநல்லூா் செண்பகக்கால் ஓடைத் தெருவைச் சோ்ந்த கருப்பசாமி மகன் மாரிச்செல்வம் (19). பங்களா தெருவைச் சோ்ந்த மைதீன் மகன் அப்துல்கரீம் (19). நண்பா்களான இருவரும் அப்பகுதியில் உள்ள கல்லூரியில் படித்துவந்தனா். இந்நிலையில், திங்கள்கிழமை இரவு இருவரும் ஒரே மொபெட்டில் சிவகாசியிலிருந்து ஊருக்குத் திரும்பிக்கொண்டிருந்தனராம்.
சிவகிரிக்கு வடக்கே மொட்டமலை பகுதியில் வந்துகொண்டிருந்தபோது, அந்த வழியாகச் சென்ற கல்லூரிப் பேருந்து மொபெட் மீது மோதியதாம். இதில் சம்பவ இடத்திலேயே மாரிச்செல்வம் உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த அப்துல் கரீம் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். சிவகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.