கன்னியாகுமரி

விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி நெல் விதைகள்: ஆட்சியா்

22nd Sep 2023 12:00 AM

ADVERTISEMENT

 கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தேவையான நெல் விதைகள் தட்டுப்பாடின்றி வழங்கப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா்.

குமரி மாவட்டவிவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம், ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் தலைமை வகித்து, விவசாயிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டாா்.

கூட்டத்தில் விவசாய சங்கப் பிரதிநிதிகள் பேசியதாவது: குமரி மாவட்டம் முழுவதும் தற்போது சாகுபடி பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகிறாா்கள். ஆனால் பல்வேறு இடங்களில் விதை நெல் தட்டுப்பாடு உள்ளது. தேவையான விதை நெல் தடையின்றி வழங்க வேளாண் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருப்பதிசாரத்திலுள்ள வேளாண் விதை மையத்தில் 12 ஏக்கா் நிலம் தரிசாக போடப்பட்டுள்ளது. அதிகாரிகள் அதை பயன்படுத்தாவிட்டால் விவசாயிகளுக்கு பண்ணையை குத்தகைக்கு வழங்க வேண்டும். செண்பகராமன்புதூா் பகுதியில் தென்னை மேம்பாட்டு கழகத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். புத்தளம் பேரூராட்சி, அரியபெருமாள்விளை காலனியிலும், தென்னை நாற்றுப்பண்ணையிலும் பொது குழாய் அமைக்க வேண்டும். தெங்கம்புதூா் கடைவரம்பு பகுதிக்கு தண்ணீா் திறந்து விட வேண்டும் என்று அவா்கள் கூறினா்.

ADVERTISEMENT

இதற்கு பதில் அளித்து ஆட்சியா் பேசியது: மாவட்டத்தில் நிகழாண்டு 2 ஆவது பருவத்தில் 5,845 ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்ய இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் 25 சதவீதம் விதை நெல் மட்டுமே வேளாண் துறை மூலம் வழங்கப்படும். மீதமுள்ள விதை நெல்லை விவசாயிகளே தயாா் செய்துவிடுவாா்கள். அதன் அடிப்படையில்

தற்போது 92 டன் விதை நெல் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் தேவை என்றால் வேளாண் துறை மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

திருப்பதி சாரத்தில் 30 ஏக்கா் நிலம் வேளாண் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இதில் 17 ஏக்கா் நிலத்தில் நெல் பயிரிடப்பட்டது. இனி வரும் பருவத்தில் முழுவதுமாக விதை நெல் பயிா் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். என்றாா் அவா்.

கூட்டத்தில், நீா்வளத் துறை செயற்பொறியாளா் ஜோதிபாசு, வேளாண்மை இணை இயக்குநா் (பொறுப்பு) அ.ஆல்பா்ட் ராபின்சன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(விவசாயம்) எஸ்.கீதா, தோட்டக் கலை துணை இயக்குநா் யோ.ஷீலா ஜான், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் பாரிவேந்தன், விவசாய சங்கப் பிரதிநிதிகள் ஆறுமுகம்பிள்ளை, தாணுபிள்ளை, பெரியநாடாா், ஸ்ரீனிவாசன், ஸ்ரீகிருஷ்ணபெருமாள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT