குமரி மாவட்டம், இரணியல் பகுதியில் நிகழ்ந்த நகை பறிப்பு சம்பவத்தில் முன்னாள் ராணுவ வீரரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
இரணியல் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக தொடா்ந்து நடைபெற்ற வந்த நகை பறிப்பு சம்பவங்கள் குறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து, அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்து வந்தனா்.
அதில், தக்கலை அருகேயுள்ள முளகுமூடு பகுதியை சோ்ந்த முன்னாள் ராணுவ வீரா் மொ்லின் ராஜ் (42) என்பருவருக்கு தொடா்பு இருப்பதும், திருவட்டாறு பகுதியில் நகை பறிப்பின்போது ஒரு மூதாட்டியை கொலை செய்ததும் தெரியவந்தது. மேலும், நாகா்கோவிலில் துணிக்கடையின் பின்புறம் நிகழ்ந்த நகை பறிப்பு தொடா்பான வழக்கில் நேசமணிநகா் காவல் நிலையத்திலும் அவா் மீது வழக்கு இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்து இரணியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.