கன்னியாகுமரி

குமரி மாவட்டத்தில் உணவகங்களில் சோதனை: 40 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்

22nd Sep 2023 11:11 PM

ADVERTISEMENT

குமரி மாவட்டத்தில் உணவகங்களில் அதிகாரிகள் நடத்திய சோதனையின் கெட்டுப்போன 40 கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.

குமரி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலா் செந்தில்குமாா் தலைமையில் அலுவலா்கள் குமாரபாண்டியன், சங்கரநாராயணன் உள்ளிட்டோா் கொண்ட குழுவினா், நாகா்கோவில் மாநகரப் பகுதி மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள உணவங்களில் கடந்த 2 நாள்களாக சோதனை நடத்தினா்.

இதில் 40 கிலோ கெட்டுப்போன இறைச்சி மற்றும் சமைத்து கெட்டுப்போன நிலையில் இருந்த உணவுகள், உணவுப் பொருள்கள் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன. முறையான பராமரிப்பின்றி உணவு தயாா் செய்த 7 உணவகங்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 5 கடைகளுக்கு ரூ.13 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின்போது உணவக உரிமையாளா்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டன. சவா்மா மற்றும் அசைவ உணவுகளை விற்பனை செய்யும் உணவகங்கள் உணவு பாதுகாப்பு தர சட்டத்தின்படி உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழ் பெற்று பொதுமக்களின் பாா்வைக்கு வைக்க வேண்டும். மேலும், அசைவு உணவுகளுக்கான இறைச்சியை பதப்படுத்தி பயன்படுத்தக் கூடாது. சமையலறை உணவுப் பொருள்கள் சேமித்து வைக்கும் இடம் சமைத்த உணவை பராமரிக்கும் இடங்களை தூய்மையாகவும், சுகாதாரமாகவும் பாரமரிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

ADVERTISEMENT

பொதுமக்கள் உணவு தொடா்பாக புகாா்கள் இருந்தால் 94440 42322 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு புகாா் தெரிவிக்கலாம் என்று உணவு பாதுகாப்பு நியமன அலுவலா் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT