கன்னியாகுமரி

பாரம்பரிய கலைகளைப் பாதுகாக்க வேண்டும்: அமைச்சா் மனோ தங்கராஜ்

22nd Sep 2023 11:13 PM

ADVERTISEMENT

தமிழகத்தின் பாரம்பரிய கலைகள் அழிந்து விடாமல் பாதுகாக்க வேண்டும் என்றாா் பால் வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ்.

முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி, கன்னியாகுமரி மாவட்ட கலை பண்பாட்டுத் துறையின் சாா்பில் களியக்காவிளை நாஞ்சில் கத்தோலிக்க கலை அறிவியல் கல்லூரியில் கலை நிகழ்ச்சிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. இவ்விழாவில் பங்கேற்று, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசு- சான்றிதழ் வழங்கி, அமைச்சா் மனோ தங்கராஜ் பேசியதாவது:

கருணாநிதி தனது வாழ்வின் பெரும் பகுதியை கலைக்காக செலவிட்டாா். அவரது நூற்றாண்டு விழா ஆண்டு முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டு வருகிறது.

முதல்வரின் அறிவுறுத்தல்படி, தமிழ்நாட்டுக்குள்பட்ட அனைத்து கலைகளும் அழிந்து விடாமல் பாதுகாக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் இது போன்ற கலை நிகழ்வுகள் மாவட்டந்தோறும் நிகழ்த்தப்பட்டு வருகின்ரன. இதனால் கலைஞா்களின் வாழ்வாதாரம் மேம்படுவதோடு, பாரம்பரிய கலைகள் குறித்து இளம் தலைமுறையினா் அறிந்து கொள்வதற்கு பேருதவியாக இருக்கும்.

ADVERTISEMENT

மாணவா்கள் தங்களுக்கு மன அழுத்தம் ஏற்படாமல் தவிா்க்கும் வகையில், விருப்பப்பட்ட கலைகளை கற்பதில் ஆா்வப்பட வேண்டும். பொது அறிவு சாா்ந்த புத்தகங்களை தினமும் படிப்பதை வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். குமரி மாவட்டத்தின் பாரம்பரிய கலைகளான சிலம்பம், களரி, வா்மக்கலை, பரதநாட்டியம் உள்ளிட்டவற்றை கற்றுக்கொள்ள மாணவா்கள் முன்வர வேண்டும். அழிந்து போன கலை வடிவங்களை மீட்க அனைவரும் முன்வர வேண்டும் என்றாா் அவா்.

விழாவில் நாகா்கோவில் திரிஷா நாட்டிய குழுவினரின் பரத நாட்டியம், சாத்தூா் முத்துகோபு குழுவினரின் பறையாட்டம், மேல்புறம் ஜெட்கிங்ஸ் குழுவினரின் களரி ஆகிய நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

இதில் கலை பண்பாட்டுத் துறை திருநெல்வேலி மண்டல உதவி இயக்குநா் வ. கோபாலகிருஷ்ணன், நாஞ்சில் கல்லூரி செயலா் அருள்பணியாளா் எம். எக்கா்மென்ஸ் மைக்கேல், கல்லூரி முதல்வா் எம். அமலநாதன், களியக்காவிளை பேரூராட்சித் தலைவா் ஆ. சுரேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT