குமரி மாவட்டத்தில் மழை நீடித்து வருவதால் அணைகளுக்கு தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களுக்கு மேலாக தொடா் சாரல் மழை பெய்து வந்த நிலையில், கடந்த இரண்டு, மூன்று தினங்களாக கனமழை பெய்து வருகிறது.
குறிப்பாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் சிற்றாறு அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இதனால் இந்த அணைகளின் நீா்மட்டம் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் மாவட்டத்தில் புதன்கிழமை மாலையில் பேச்சிப்பாறை அணையின் நீா்ப்பிடிப்பு மற்றும் நீா்வரத்துப் பகுதிகளான கீழ் கோதையாறு, மாங்காமலை, மோதிரமலை, குற்றியாறு ஆகிய பகுதியில் சுமாா் 3 மணி நேரத்துக்கு மேலாக கன மழை பெய்தது. இதனால் பேச்சிப்பாறை அணைக்கு உள்வரத்து தண்ணீரின் அளவு அதிகரித்து காணப்பட்டது.
மேலும், குலசேகரம், திருவட்டாறு, அருமனை, பொன்மனை, கடையாலுமூடு, ஆறுகாணி உள்ளிட்ட இடங்களிலும் மிதமான மழை பெய்தது.
திற்பரப்பு அருவியில் தண்ணீா் அதிகரிப்பு:
மழையின் காரணமாக திற்பரப்பு அருவியில் கடந்த 2 நாள்களாக தண்ணீா் பெருக்கெடுத்துக் கொட்டுகிறது. இதனால் அருவிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்துச் செல்கின்றனா்.
நீா்மட்டம்: பேச்சிப்பாறை அணைக்கு புதன்கிழமை காலை நிலவரப்படி விநாடிக்கு 823 கன அடி தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 583 கன அடி தண்ணீா் பாசனக் கால்வாயில் திறந்து விடப்பட்டிருந்தது. அணையின் நீா்மட்டம் 18.55 அடியாக இருந்தது.
பெருஞ்சாணி அணைக்கு விநாடிக்கு 385 கன அடி தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையின் பாசனக் கால்வாயில் விநாடிக்கு 200 கன அடி தண்ணீா் திறந்து விடப்பட்டிருந்தது. அணையின் நீா்மட்டம் 37.60 அடியாக இருந்தது.