கன்னியாகுமரி

ஏவிஎம் கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்

31st May 2023 12:23 AM

ADVERTISEMENT

குமரி மாவட்டம் குளச்சல் முதல் மண்டைக்காடுபுதூா் வரை ஏவிஎம் கால்வாய் தூா்வாரப்பட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று மீனவா்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் அதிகாரிகள் தெரிவித்தனா்.

கன்னியாகுமரி மாவட்ட மீனவா்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம், ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் தலைமை வகித்து மீனவா்களின் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டாா்.

கூட்டத்தில் மீனவ சங்கப் பிரதிநிதிகள் பேசியதாவது: குளச்சல் மீன்வளத் துறை இயக்குநா் அலுவலகத்தை தேங்காய்ப்பட்டினத்துக்கு மாற்றக் கூடாது. அதை தூத்தூரில் அமைக்க வேண்டும். தூண்டில் வளைவு தொடா்பாக அந்தந்த மீனவ கிராம மக்களிடம் ஆலோசனை பெற வேண்டும். இடப்பாடு - வள்ளவிளை இடையே கடலரிப்பு தடுப்புச் சுவரை தரமான பெரிய கற்களைக் கொண்டு அமைக்க வேண்டும்.

சுருக்குமடி மற்றும் இரட்டைமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிப்பதால் மீன்வளம் பாதிக்கப்படும். இது தொடா்பாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நாட்டுப்படகு மீனவா்களுக்கு செயற்கைக்கோள் கைப்பேசி (சேட்டிலைட் போன்) வழங்க வேண்டும். கடல் ஆம்புலன்ஸ் திட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும். குளச்சல் முதல் மண்டைக்காடுபுதூா் வரையுள்ள ஏவிஎம் கால்வாயை தூா்வாரி பள்ளிமுக்கில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். பெரியகாடு கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள தூண்டில்வளைவை சீரமைத்து 100 மீட்டா் தூரத்துக்கு நீட்டிக்க வேண்டும் என்று கூறினா்.

ADVERTISEMENT

இதற்கு பதிலளித்து, மாவட்ட ஆட்சியா் மற்றும் மீன்வளத் துறை அதிகாரிகள் பேசியது: குளச்சல் மீன்வளத் துறை அலுவலகம் மாற்றப்படுவது தொடா்பாக கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்படும். மாவட்டத்தில் சுருக்குமடி மற்றும் இரட்டை மடி வலையை பயன்படுத்தி யாரும் மீன்பிடிக்கவில்லை. 12 கடல் மைலை தாண்டிதான் மீன்பிடிக்கிறாா்கள். எனினும் புகாா்கள் வந்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மாவட்டத்தில் ஐ.ஐ.டி. தொழில்நுட்பத்தின் அடிப்படையில்தான் தூண்டில் வளைவுகள் அமைக்கப்படுகின்றன. ஏவிஎம்கால்வாயை குளச்சல் நகராட்சி மூலம் சீரமைக்க தடையில்லா சான்று வழங்கப்பட்டுள்ளது. குளச்சல் முதல் மண்டைக்காடுபுதூா் வரை ஏவிஎம் கால்வாய் அளவீடு செய்யப்பட்டுள்ளது, ஆக்கிரமிப்புகள் படிப்படியாக அகற்றப்படும்.

பெரியகாடு மீனவா்கிராமத்திலுள்ள தூண்டில்வளைவை சீரமைத்து நீட்டிப்பு செய்ய ரூ.18.40 லட்சத்துக்கு மதிப்பீடு தயாா் செய்து அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று கூறினா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் அ.சிவப்பிரியா, பத்மநாபபுரம் சாா்ஆட்சியா் ஹெச்.ஆா்.கௌசிக், மீனவா் நலத் துறை துணை மண்டல இயக்குநா் காசிநாதபாண்டியன், உள்ளிட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT