கன்னியாகுமரி

எரிவாயு உருளைகளை ஏற்றிச் சென்ற மினி லாரி விபத்து: ஓட்டுநா் காயம்

28th May 2023 01:13 AM

ADVERTISEMENT

குமரி மாவட்டம் திருவட்டாறு அருகே சமையல் எரிவாயு உருளைகளை ஏற்றிச் சென்ற மினி லாரி சனிக்கிழமை விபத்திற்குள்ளானதில் ஓட்டுநா் பலத்த காயமடைந்தாா்.

தக்கலை மேட்டுக்கடை பகுதியில் செயல்பட்டுவரும் சமையல் எரிவாயு முகமையிலிருந்து, வீட்டுப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு உருளைகளை ஏற்றிக் கொண்டு, சுவாமியாா்மடம் அருகே முளவிளை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு மினி லாரி சென்று கொண்டிருந்தது.

வெட்டுகுழி பகுதியில் இந்த மினி லாரி சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர மரத்தில் மோதியது. பின்னா் அருகில் பள்ளத்தில் உள்ள தொழிலாளியின் வீட்டு சுற்றுச் சுவரை உடைத்துக் கொண்டு வீட்டுச் சுவரில் மோதி நின்றது. இந்த விபத்தில் மினி லாரியை ஓட்டிச் சென்ற அழகிய மண்டபம் பகுதியை சோ்ந்த சுரேஷுக்கு (40) பலத்த காயம் ஏற்பட்டது.

தகவறிந்த குலசேகரம் தீ அணைப்பு நிலையத்தினா் மற்றும் திருவட்டாறு போலீஸாா், சம்பவ இடத்திற்குச் சென்று மினி லாரியிலிருந்த சமையல் எரிவாயு உருளைகளை பாதுகாப்பாக மீட்டனா். மேலும், காயமடைந்த ஓட்டுநரை தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

ADVERTISEMENT

இது குறித்து திருவட்டாறு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT