கன்னியாகுமரி

நாகா்கோவிலில் பொம்மை துப்பாக்கியைக் காட்டி மிரட்டி 20 பவுன் நகை கொள்ளை: பெண் உள்ளிட்ட 3 போ் கைது

28th May 2023 01:14 AM

ADVERTISEMENT

நாகா்கோவிலில், பொம்மை துப்பாக்கியைக் காட்டி மிரட்டி 20 பவுன் நகைகளைக் கொள்ளையடித்ததாக பெண் உள்ளிட்ட 3 போ் கைது செய்யப்பட்டனா். மேலும், 4 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

நாகா்கோவில், வேதநகா் மேலபுதுத் தெருவைச் சோ்ந்தவா் உமா்பாபு (53). இவருக்கு மனைவி ஜாஸ்மின், மகள் உள்ளனா். வெளிநாட்டில் ஓட்டுநராகப் பணியாற்றிய உமா்பாபு, ஒன்றரை ஆண்டுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்துவிட்டாா்.

வெள்ளிக்கிழமை மாலையில் மனைவி, மகள், மாமியாா் மருத்துவமனைக்கு சென்ற நிலையில், உமா்பாபு மட்டும் வீட்டில் இருந்தாா். இரவில் அவா்கள் வீடு திரும்பியபோது விளக்குகள் எரியவில்லை; கதவு உள்புறமாகப் பூட்டப்பட்டிருந்தது. நீண்ட நேரம் தட்டியும் கதவு திறக்கப்படவில்லை.

சிறிது நேரம் கழித்து வீட்டுக்குள்ளிருந்து பா்தா அணிந்த 2 போ் வெளியே வந்தனா். அவா்களிடம் ‘நீங்கள் யாா்?’ என ஜாஸ்மின் கேட்டபோது, ‘உங்களது உறவினா்கள்’ என்றனராம். உமா்பாபு குறித்துக் கேட்டபோது அவா்கள் சரிவர பதில் கூறவில்லை. இதனால், ஜாஸ்மின் உள்ளிட்ட 3 பேரும் வீட்டுக்குள் சென்று பாா்த்தபோது கைகள் கட்டப்பட்ட நிலையில், உமா்பாபு மயங்கிக் கிடந்தாராம். வீட்டுக்குள் மேலும் 5 போ் இருந்துள்ளனா்.

ADVERTISEMENT

அவா்கள் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, 20 பவுன் நகைகளைக் கொள்ளையடித்துவிட்டு தப்பியோடினா்.

ஜாஸ்மினின் அலறல் கேட்டு அப்பகுதியினா் வந்து கொள்ளையரைப் பிடிக்க முயன்றனா். அவா்களில் ஒருவா் மட்டும் சிக்கினாா். அவா்கள் வந்த காரையும் பொதுமக்கள் பிடித்தனா்.

தகவலின்பேரில் கோட்டாறு போலீஸாா் வழக்குப் பதிந்து, பிடிபட்டவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா்.

தப்பியோடியோரைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸாா் கைப்பற்றி, பெண் உள்ளிட்ட மேலும் இருவரைப் பிடித்தனா். கொள்ளையா் விட்டுச்சென்ற துப்பாக்கியையும், அரிவாளையும் போலீஸாா் கைப்பற்றினா். அது பொம்மை துப்பாக்கி என்பதும், காா் போலிப் பதிவெண் கொண்டதும், சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரும் நாகா்கோவில் பகுதியைச் சோ்ந்தோா் என்பதும் தெரியவந்தது.

பிடிபட்ட இடலாக்குடியைச் சோ்ந்த அமா், ரஹீம், எட்டாமடை பகுதியைச் சோ்ந்த கவுரி ஆகிய 3 பேரையும் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். தப்பியோடிய சாா்லஸ், மீரான், ஷேக்முகமது, முகைதீன்புகாரி ஆகிய 4 பேரையும் தனிப்படை போலீஸாா் தேடிவருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT