கன்னியாகுமரி

ஆவின் நிறுவனத்தை சிறந்ததாக மாற்ற நடவடிக்கை அமைச்சா் த.மனோ தங்கராஜ்

26th May 2023 12:00 AM

ADVERTISEMENT

ஆவின் நிறுவனத்தை தரத்திலும், சேவையிலும் ஒரு சிறந்த நிறுவனமாக மாற்றுவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என தமிழக பால் வளத்துறை அமைச்சா் த. மனோ தங்கராஜ் தெரிவித்தாா்.

இது குறித்து நாகா்கோவிலில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை அவா் கூறியதாவது: முதல்வரின் அறிவுறுத்தலின்படி, ஆவின் நிறுவனத்தை மேம்படுத்துவது குறித்து பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆவின் நிறுவனம் பொதுத்துறை நிறுவனமாக இருந்தாலும் லாப நோக்கில் இல்லாமல், மக்களுக்கு குறைந்த விலையில் தரமான பால்

பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. சுமாா் 4 லட்சம் விவசாயிகளிடமிருந்து நாளொன்றுக்கு சுமாா் 35 லட்சம் லிட்டா் பால் கொள்முதல் செய்து விநியோகம் செய்து வருகிறோம்.

தற்போது 45 லட்சம் லிட்டா் பால் கையாள்வதற்கான வசதிகள் மற்றும் உபகரணங்கள் உள்ளன. இந்த வசதியை இந்த ஆண்டுக்குள் 70 லட்சம் லிட்டா் பாலாக உயா்த்த முதல்வரின் ஆலோசனை பெற்று அலுவலா்களுக்கு உத்தரவு பிறப்பித்து அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

ADVERTISEMENT

இந்த நிலையில் அமுல் நிறுவனத்தினா் வியாபார நோக்கோடு வருவதால் ஆவினை பாதிப்பதாக கூறப்படுகிறது. அந்தந்த மாநிலங்களில் இருக்கின்ற பால் உற்பத்தியாளா்களை பாதிக்காத வகையில் செயல்பாடுகள் இருக்க வேண்டும். இதில் விதிமீறல் ஏதும் வந்துவிடக் கூடாது என மத்திய அமைச்சருக்கு முதல்வா் கடிதம் எழுதியுள்ளாா்.

தற்போது ஆவினில் நிா்வாக ரீதியாக பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்படுகின்றன. ஆவின் நிறுவனத்தை தரத்திலும், சேவையிலும் ஒரு சிறந்த நிறுவனமாக மாற்றுவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT