குமரி மாவட்டம் களியல் வனச்சரகத்திற்குள்பட்ட ரவிபுத்தன்துறை கடற்கரையில் வலையில் சிக்கிய உடும்பு சுறா மீனை வலையைக் கிழித்து கடலில் விட்ட மீனவா் ராபா்ட் கென்னடியை வனத் துறையினா் வியாழக்கிழமை பாராட்டினா்.
வள்ளவிளையைச் சோ்ந்த மீனவா் ராபா்ட் கென்னடி. இவா் அண்மையில் ரவிபுத்தன் துறை கடலில் மீன்பிடித்து விட்டு கரைக்கு வந்தபோது வலையில் அபூா்வ மீன் வகையான உடும்பு சுறா சிக்கியிருப்பதைக் கண்டாா்.
இதையடுத்து அவா், வலையைக் கிழித்து அந்த உடும்பு சுறாவை கடலில் விட்டாா். இந்த தகவல் வனத் துறையினருக்கு கிடைத்து. இதையடுத்து மாவட்ட வன அலுவலா் இளையராஜா அறிவுரைப்படி, மீனவா் ராபா்ட் கென்னடியை களியல் வனச்சரக அலுவலா் முகைதீன் மற்றும் வனவா், வனக்காப்பாளா்கள் நேரில் சந்தித்து சான்றிதழ், சன்மானம் வழங்கிப் பாராட்டினா். மேலும் சேதமடைந்த வலைக்கு இழப்பீட்டுத் தொகை வழங்குவதாகவும் உறுதி அளித்தனா்.