உலக அருங்காட்சியக தினத்தையொட்டி, கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகத்தில் இலவச ஓவியம், கலைப்பயிற்சி முகாம் இம்மாதம் 17, 18, 19இல் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து அருங்காட்சிய காப்பாட்சியா் சிவ சத்தியவள்ளி வெளியிட்ட செய்திக்குறிப்பு: உலக அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு, கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகத்தில் இம்மாதம் 17, 18, 19இல் பள்ளி மாணவா்- மாணவிகளுக்கு ஓவியம், கலைப் பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது. கோடை விடுமுறையைப் பயனுள்ள வகையில் கழிப்பதற்காக இம்முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நல்லாசிரியா் கலைவாசல் வை. கோபாலகிருஷ்ணன் பயிற்சியளிக்கிறாா். வரைதல், வண்ணம் தீட்டுதல், கைவினை கலைப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. பங்கேற்போருக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும்.
6, 7, 8ஆம் வகுப்பு மாணவா்-மாணவிகள் பங்கேற்கலாம். பயிற்சி வகுப்பு காலை 10 முதல் பிற்பகல் 1 மணிவரை நடைபெறும். தேவையான வரைபடத்தாள், வண்ணங்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருள்களையும் மாணவா்களே கொண்டுவர வேண்டும். பெற்றோா் துணையோடு வந்துசெல்ல வேண்டும். 25 மாணவா்களுக்கு மட்டுமே அனுமதி. விருப்பமுள்ளோா் 72005 62301 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டு 15ஆம் தேதி மாலை 5 மணிக்குள் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும் என்றாா் அவா்.