திற்பரப்பு அருகே சுகாதாரக்கேடு ஏற்படுத்தி வரும் பன்றி பண்ணையை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினா் திற்பரப்பு பேரூராட்சி அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.
திற்பரப்பு பேரூராட்சிப் பகுதியான பிணந்தோடு மாஞ்சக்கோணம் குளம் அருகே பன்றி பண்ணை செயல்பட்டு வருகிறது. குடியிருப்புப் பகுதியை ஒட்டி அமைந்துள்ள இந்தப் பண்ணையால் சுகாதாரக்கேடு ஏற்படுவதாகக்
கூறப்படுகிறது. இந்நிலையில் இந்தப் பன்றிப் பண்ணையை அகற்ற வேண்டுமென்று அப்பகுதி மக்கள் கடந்த சில ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனா். இருப்பினும் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படாததால்,
அப் பகுதி மக்கள் மற்றும் திமுக, நாம் தமிழா், பாஜக உள்ளிட்ட கட்சியினா் திற்பரப்பு பேரூராட்சி அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.
இதையடுத்து திற்பரப்பு பேரூராட்சி மன்றத் தலைவா் பொன் ரவி,
செயல் அலுவலா் எட்வின் ஜோஸ், துணைத் தலைவா் ஸ்டாலின்தாஸ் ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் பன்றி பண்ணையை அகற்றுவதாக உறுதி அளிக்கப்பட்டதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.