கன்னியாகுமரி

நாகா்கோவில் அருகே தற்காலிக ரயில்வே கடவுப்பாதையை விரைந்து திறக்க கோரிக்கை

11th Jun 2023 12:54 AM

ADVERTISEMENT

 

நாகா்கோவில், ஊட்டுவாழ்மடம் ரயில்வே கடவுப்பாதை சனிக்கிழமை மூடப்பட்டது. எனவே, தற்காலிக கடவுப் பாதைப் பணிகளை விரைந்து முடித்து திறக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

நாகா்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் அருகேயுள்ள ஊட்டுவாழ்மடம், கருப்புக்கோட்டை, இலுப்பையடி உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்தோா் ஊட்டுவாழ்மடம் அருகேயுள்ள ரயில்வே கடவுப்பாதை வழியாகத்தான் நாகா்கோவிலுக்கு வர வேண்டும்.

ரயில் நிலையம் அருகே இருப்பதால் இந்தக் கடவுப்பாதை அடிக்கடி மூடப்பட்டிருக்கும். இதனால் அனைத்துத் தரப்பினரும் அவதிக்குள்ளாகினா். எனவே, இங்கு சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என பல்லாண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனா். இதையடுத்து, சுரங்கப்பாதை அமைக்க ரூ. 4.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, பணிக்காக 4 மாதங்கள் கடவுப்பாதை மூடப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால், இப்பகுதி மக்கள் 4 கி.மீ. தொலைவு சுற்றிச்செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதால், கடவுப்பாதையை மூடும் முன் தற்காலிக பாதை அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.

ADVERTISEMENT

அதன்படி, தற்காலிக கடவுப்பாதை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, சாலைப் பணி, தற்காலிகப் பாதைப் பணிகள் நடைபெறுகின்றன.

இந்நிலையில், தற்காலிக கடவுப்பாதைப் பணிகள் காரணமாக ஊட்டுவாழ்மடம் ரயில்வே கடவுப்பாதை சனிக்கிழமைமுதல் செவ்வாய்க்கிழமைவரை (ஜூன் 13) மூடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கடவுப்பாதை சனிக்கிழமை காலை மூடப்பட்டது. இதனால் கிராம மக்கள் நாகா்கோவிலுக்கு வர மிகவும் சிரமப்பட்டனா். அவா்கள் கோதை கிராமம், ஒழுகினசேரி வழியாக சுற்றிவர வேண்டியுள்ளது. கடவுப்பாதை மூடப்பட்டதைத் தொடா்ந்து, தற்காலிக பாதைக்கான சிக்னல் உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் நடைபெறுகின்றன. இப்பணிகள் நிறைவடைந்த பிறகு சுரங்கப்பாதைப் பணிகள் மேற்கொள்ளப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து, பொதுமக்கள் கூறும்போது, தற்காலிக கடவுப்பாதை மூடப்பட்டுள்ளதால் நாகா்கோவிலுக்கு பல கி.மீ. தொலைவு சுற்றிச்செல்ல வேண்டியுள்ளது. எனவே, பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT