கன்னியாகுமரி

குளச்சல் கடலில் பலத்த சூறைக்காற்று கட்டு மரங்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை

10th Jun 2023 06:25 AM

ADVERTISEMENT

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் கடல் பகுதியில் வெள்ளிக்கிழமை பலத்த சூறைக்காற்று வீசியதால் கட்டு மரங்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

குமரி மாவட்டத்தில் ஜூன், ஜூலை மாதங்களில் கடல் கொந்தளிப்பாக காணப்படுவது வழக்கம். அதனால் பாதுகாப்பு கருதி, விசைப்படகுகள், ஃபைபா் வள்ளங்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்வதில்லை.

சில நாள்களுக்கு முன்பு குளச்சல் கடல் பகுதியில் பலத்த காற்று வீசியதால் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்ற விசைப்படகுகள் பாதியிலேயே கரை திரும்பின. இதனால் மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டது.

கடந்த 1 ஆம் தேதி முதல் 61 நாள்களுக்கு மேற்கு கடற்கரை பகுதியில் மீன் பிடிக்க விசைப்படகுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்லவில்லை. குளச்சல் பகுதி விசைப்படகுகள், குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டுள்ளன. ஆனால் வள்ளங்கள், கட்டுமரங்கள் வழக்கம்போல் மீன்பிடித்து வருகின்றன.

ADVERTISEMENT

இந்நிலையில் வியாழக்கிழமை முதல் குளச்சல் கடல் பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசி வருகிறது. இதனால் கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது. ராட்சத அலைகள் மணற்பரப்பு வரை வருவதால் குளச்சல், கொட்டில்பாடு சுற்றுவட்டார பகுதிகளில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை 2 ஆவது நாளாக குளச்சல் கடல் பகுதியில் பலத்த காற்று வீசியது. இதனால் மிகச்சில கட்டுமரங்களே மீன் பிடிக்கச் சென்றன. அவற்றுள் குறைவான நெத்திலி மீன்களே கிடைத்தன. பெரும்பாலான கட்டுமரங்கள் மீன் பிடிக்கச் செல்லாததால் குளச்சலில் மீன் வரத்து குறைந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT