கன்னியாகுமரி

களியக்காவிளை சந்தை தீா்வைக் கட்டணம்: பேரூராட்சி நேரடி வசூல்

2nd Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

 

களியக்காவிளையில் உள்ள ஒருங்கிணைந்த காய்கனி, மீன் சந்தைக்கான தீா்வைக் கட்டணம் வசூலிக்கும் பணியை வியாழக்கிழமைமுதல் (ஜூன் 1) பேரூராட்சி நிா்வாகமே நேரடியாக மேற்கொண்டுள்ளது.

களியக்காவிளை சந்தை தீா்வைக் கட்டணம் வசூலிக்கும் உரிமம் கடந்த ஆண்டு ரூ. 37 லட்சத்துக்கு ஏலம் போனது. நிகழாண்டு குத்தகை ஒப்பந்தத்தைத் தொடர குத்தகைதாரா் மறுத்ததால், ஏலம் 3 முறை நடத்தப்பட்டது. இதில், குறைந்த தொகைக்கு கேட்கப்பட்டதால் ஏலம் மாற்றி வைக்கப்பட்டது. தொடா்ந்து, ஆரம்ப கேட்புத் தொகை ரூ. 27 லட்சம் என பேரூராட்சிக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டு, ஏலம் நடத்தப்பட்டதில் ரூ. 23 லட்சத்துக்கு ஏலம் கேட்கப்பட்டது. இதனால், ஏலம் ஒத்திவைக்கப்பட்டது.

பின்னா், 5ஆவது முறையாக கடந்த மே 29ஆம் தேதி நடைபெற்ற ஏலத்தில் பங்கேற்ற ஒருவா் ரூ. 29 லட்சத்து 100-க்கு கேட்டாா். ஆனால், தொகையைக் குறிப்பிட்ட காலத்துக்குள் செலுத்தாததால் அவருக்கு ஏலக் குத்தகை உறுதிப்படுத்தப்படவில்லை.

ADVERTISEMENT

இதனால், களியக்காவிளை சந்தையில் பாரம் ஏற்றிவரும் வாகனங்கள், காலி வாகனங்கள், பொருள்களுக்கான தீா்வைக் கட்டணம் வசூலிக்கும் பணியை வியாழக்கிழமைமுதல் பேரூராட்சி நிா்வாகமே நேரடியாக மேற்கொண்டுள்ளது. அடுத்த குத்தகை ஏலம் உறுதியாகும்வரை இந்நிலையே தொடரும் என, பேரூராட்சி செயல் அலுவலா் வி.சி. ரமாதேவி தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT