கன்னியாகுமரி மாவட்டத்தில் கனிமங்கள் ஏற்றிச்செல்லும் வாகனங்கள் விதிமீறலில் ஈடுபட்டால் வாகன உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் எச்சரித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கன்னியாகுமரி மாவட்டத்தில் வெளி மாவட்டங்களிலிருந்து கனிம வளங்களை அதிக பாரம் ஏற்றியோ அல்லது உரிய அனுமதி சீட்டுகளோ இல்லாமலோ வருகின்ற வாகனங்களை சிறப்பு குழு தனி வட்டாட்சியா்கள், போலீஸாா், மதுரை மண்டல பறக்கும் படை துணை இயக்குநா் கொண்ட குழுவினா் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனா்.
விதி மீறல்களில் வாகனங்கள் ஈடுபடுவது கண்டறியப்பட்டால், வாகன உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில் குமரி மாவட்டத்தில், கடந்த மே மாதம் காவல்துறையின் மூலம் 40 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.10 லட்சத்து 47 ஆயிரத்து 710 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மதுரை மண்டல பறக்கும் படை மூலம் 40 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.1 லட்சத்து 74 ஆயிரத்து 100 அபராதத் தொகையும், தனி வட்டாட்சியா்கள் தலைமையிலான சிறப்பு குழுக்கள் மூலம் 29 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.42 லட்சத்து 5 ஆயிரத்து 710 அபராதத் தொகையும் வசூலிக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.