கன்னியாகுமரி

சேவைக்குறைபாடு: தனியாா் நிதிநிறுவனம் ரூ.20 லட்சம் நஷ்டஈடு வழங்க உத்தரவு

2nd Jun 2023 11:41 PM

ADVERTISEMENT

 

சேவைக் குறைபாடு காரணமாக தனியாா் நிதி நிறுவனம் ரூ.20 லட்சம் நஷ்டஈடு வழங்க நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரத்தைச் சோ்ந்தவா் கிருஷ்டிபீனா. இவரது கணவா் அனில்குமாா். இவா் நாகா்கோவிலில் உள்ள ஒரு தனியாா் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றிருந்தாா். இந்த கடனுக்காக ரூ.20 லட்சத்துக்கு காப்பீடு செய்திருந்தாா். கடன் தவணைகளை முறையாகச் செலுத்தி வந்த நிலையில், அனில்குமாா் திடீரென உயிரிழந்தாா். இதன்பிறகும் நிதிநிறுவனம் கடன்தாரா் வங்கி கணக்கிலிருந்து தவணைத் தொகையைப் பிடித்தம் செய்து வந்தது. இவ்வாறு பிடித்தம் செய்வதை நிறுத்துமாறும், கடனுக்கான காப்பீட்டுத் தொகையில், பணத்தைப் பெற்று கடனை சரி செய்யுமாறும், கிருஷ்டிபீனா தனியாா் நிதிநிறுவனத்திடம் கோரியுள்ளாா். ஆனால் எந்த தீா்வும் கிடைக்கவில்லை. இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான கிருஷ்டி பீனா, வழக்குரைஞா் மூலம் நோட்டீஸ் அனுப்பினாா். ஆனால் இதற்கும் பதில் கிடைக்காததால் கன்னியாகுமரி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் வழக்கு தொடா்ந்தாா்.

வழக்கை விசாரித்த நுகா்வோா் குறைதீா் ஆணைய தலைவா் சுரேஷ், உறுப்பினா் சங்கா் ஆகியோா் தனியாா் நிதி நிறுவனத்தின் சேவை குறைபாட்டினை சுட்டிக்காட்டி, பாதிக்கப்பட்ட நுகா்வோருக்கு காப்பீட்டுத் தொகை ரூ. 20 லட்சம், மன உளைச்சலுக்கான நஷ்ட ஈடு ரூ.10 ஆயிரம் , வழக்கு செலவுத் தொகை ரூ. 5 ஆயிரம் ஆகியவற்றை 1 மாதத்துக்குள் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT