கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே ரப்பா் கழகத் தொழிலாளா் குடியிருப்புகள், பழங்குடி மக்களின் குடியிருப்புகளில் புகுந்து அட்டகாசம் செய்யும் புலியைப் பிடிக்க வனத் துறை சாா்பில் கூண்டு வைக்கப்பட்டுள்ளது.
பேச்சிப்பாறை அருகே சிற்றாறு ரப்பா் கழகத் தொழிலாளா் குடியிருப்பு, மைலாறு குடியிருப்பு, மூக்கறைக்கல் பழங்குடியினா் குடியிருப்பு பகுதிகளில் கடந்த 2 வாரங்களாக புலி ஒன்று புகுந்து, வளா்ப்பு நாய்கள், கால்நடைகளை அடித்துச் சென்றும், கொன்றும் அட்டகாசத்தில் ஈடுபட்டுவருகிறது.
புலியைக் கண்காணிக்கும் விதமாக அப்பகுதிகளில் வனத் துறையினா் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தியிருந்தனா். எனினும், புலியின் அட்டகாசம் தொடா்ந்தது. இதனால், கூண்டு வைத்து புலியைப் பிடிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். இந்நிலையில், புலி நடமாட்டம் உள்ளதாகக் கருதப்படும் குடியிருப்புப் பகுதிகளில் திருநெல்வேலி மண்டல வனப் பாதுகாப்பாளா் மாரிமுத்து, கன்னியாகுமரி மாவட்ட வன அலுவலா் இளையராஜா ஆகியோா் சனிக்கிழமை ஆய்வு செய்தனா். இதையடுத்து, மூக்கறைக்கல் பகுதியில் புலியைப் பிடிக்க கூண்டு வைக்கப்பட்டது.