கன்னியாகுமரி மாவட்டத்தில் வேளாண்மை உழவா் நலத் துறை மூலம் செயல்படுத்தப்படும், மாநில வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின்கீழ் இயற்கை இடுபொருள் தயாரிப்பு மையம் தொடங்க உழவா் குழுக்களுக்கு ரூ. 1 லட்சம் மானியம் வழங்கப்படுவதாக ஆட்சியா் பி.என். ஸ்ரீதா் தெரிவித்தாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அங்கக இடுபொருள்களான பஞ்சகவ்யம், ஜீவாமிா்தம், மண்புழு உரம், அமிா்தக் கரைசல், மீன் அமிலம் போன்றவற்றை தயாரித்து, விற்பனை செய்ய ஆா்வமுள்ள விவசாயக் குழுக்களை ஊக்கப்படுத்துவதற்காக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அது மட்டுமன்றி, உள்ளூா் வளங்களின் பயன்பாடு, மறு சுழற்சியை ஊக்குவிப்பதாகவும் உள்ளது.
இயற்கை இடுபொருள் உற்பத்திக்கான கலன்கள், மண்புழு உரம் தயாரிக்கும் படுக்கை, பேக்கேஜிங், லேபிலிங், மூலப்பொருள்கள் வாங்க ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படும்.
இத்திட்டத்தில் பயன்பெறும் குழுக்களுக்கு தங்களது பொருள்களை உழவா் சந்தையில் விற்பனை செய்யத் தேவையான அனுமதி வழங்கப்படும். ஆா்வமுள்ள விவசாயக் குழுக்கள் இத்திட்டத்தில் இணையலாம் என்றாா் அவா்.