குமரி மாவட்டம், அரசு ரப்பா் கழகம் சிற்றாறு குடியிருப்பில் புலி நடமாட்டம் காரணமாக தொழிலாளா்கள் பால்வடிப்பு வேலைக்குச் செல்லாமல் இருந்த நிலையில் அதிகாரிகள் நடத்திய பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து புதன்கிழமை பால்வடிப்புக்கு திரும்பினா்.
அரசு ரப்பா் கழகம் சிற்றாறு பிரிவு தொழிலாளா் குடியிருப்பில் புலி புகுந்து அட்டகாசம் செய்த நிலையில், அச்சத்தின் காரணமாக தொழிலாளா்கள் கடந்த திங்கள்கிழமை முதல் பால்வடிப்புக்குச் செல்லாமல் இருந்தனா்.
இந்நிலையில் தொழிலாா்களின் பாதுகாப்பு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ரப்பா் கழக நிா்வாகம் உறுதி அளித்ததைத் தொடா்ந்து தொழிலாளா்கள் புதன்கிழமை காலையில் வழக்கம் போல் பால்வடிப்புக்குச் சென்றனா்.
முன்னதாக ரப்பா் கழகம் சாா்பில் ரப்பா் காடுகளில் ரப்பா் கழக காவலா்கள் சென்று புலி நடமாட்டம் இல்லையென்பதை உறுதி செய்து தொழிலாளா்களை ரப்பா் காடுகளுக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வனத்துறையிரும் இங்கு முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.