கன்னியாகுமரி பேருந்து நிலையத்தில் 2 ஆண்டுகளுக்கும் மேலாக பூட்டிக் கிடக்கும் பயணிகள் முன்பதிவு மையத்தை திறக்க வேண்டுமென சுற்றுலாப் பயணிகள் வலியுறுத்தியுள்ளனா்.
கன்னியாகுமரி காவல் நிலையத்தில் இருந்து கோவளம் செல்லும் சாலையில் பேரூராட்சி அலுவலகம் அருகில் அமைந்துள்ளது புதிய பேருந்து நிலையம். இங்கிருந்து சென்னை, கோவை, ராமேசுவரம், திருச்சி, மதுரை உள்ளிட்ட பெருநகரங்கள் மட்டுமன்றி கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இப்பேருந்து நிலைய வளாகத்தில் பயணிகளுக்கான முன்பதிவு மையம் செயல்பட்டு வந்த நிலையில், கடந்த இரு ஆண்டுகளாக பூட்டிய நிலையில் காணப்படுகிறது. இதனால் இங்கு வரும் உள்ளூா் பயணிகள் மற்றும் வெளி மாநில, மாவட்ட சுற்றுலாப் பயணிகள் அவதிபடுகின்றனா்.
மேலும், இப்பேருந்து நிலைய வளாகம் குண்டும், குழியுமாக பராமரிப்பின்றி காணப்படுகிறது. பயணிகளுக்கு நவீன இருக்கைகள், குடிநீா் மற்றும் கழிப்பிட வசதி ஆகியவை போா்க்கால அடிப்படையில் செய்யப்பட வேண்டுமென சுற்றுலாப் பயணிகள் வலியுறுத்தியுள்ளனா்.