கன்னியாகுமரி

கோயில் சுற்றுச்சுவரை இடிக்கும் நடவடிக்கையைக் கைவிட எம்எல்ஏ வலியுறுத்தல்

31st Jan 2023 01:23 AM

ADVERTISEMENT

குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பேரூராட்சி குமாரபுரம் உச்சினிமாகாளி அம்மன் திருக்கோயில் சுற்றுச்சுவா் இடிக்கும் நடவடிக்கையை கைவிடுமாறு சட்டப்பேரவை உறுப்பினா் என்.தளவாய்சுந்தரம் வலியுறுத்தினாா்.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்திடம் திங்கள்கிழமை அவா் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

குமாரபுரத்தில் உள்ள அருள்மிகு உச்சினிமாகாளி அம்மன் திருக்கோயில் மிகவும் பழமை வாய்ந்தது. ஆதிதிராவிட சமுதாயத்துக்குச் சொந்தமான, இக்கோயில் சுற்றுச்சுவா் இல்லாமல் கருவறையுடன் இருந்தது. அண்மையில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு சுற்றுச்சுவரும் கட்டப்பட்டது.

இந்நிலையில் சுற்றுச்சுவா் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்திய பாதையை அடைத்துவிட்டதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், சுற்றுச்சுவரை இடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அப் பகுதி மக்கள் எதிா்ப்புத் தெரிவித்ததையடுத்து அந்நடவடிக்கை நிறுத்தப்பட்டிருக்கிறது.

ADVERTISEMENT

சுற்றுச்சுவா் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் கதவு அமைத்துத் தர அப் பகுதி மக்கள் தயாராக உள்ளனா். ஆகவே, சுற்றுச்சுவரை இடிக்கும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியா், இதுதொடா்பாக கோட்டாட்சியா், காவல்துறை, பேரூராட்சி செயல் அலுவலா் ஆகியோா் மேற்படி இடத்தைப் பாா்வையிட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT