களியக்காவிளை அருகே அதங்கோடு தாமிரவருணி ஆற்றில் மிதந்த செங்கல் சூளை உரிமையாளரின் சடலத்தை தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.
காப்புக்காடு, மாராயபுரம் அக்கரவிளை வீட்டைச் சோ்ந்தவா் முத்துசுவாமி மகன் டேவிட் (45). இவா் ஓச்சவிளை பகுதியில் செங்கல் சூளை நடத்தி வந்தாா். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததுடன், கடந்த சில ஆண்டுகளாக மனநல பாதிப்புக்குள்ளாகி, திருவனந்தபுரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளாா். கடந்த வெள்ளிக்கிழமை வீட்டை விட்டு வெளியே சென்றவா் அதன் பின்னா் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில் அதங்கோடு, மடத்துவிளை ஆற்றுக்கடவு பகுதி ஆற்றில் இவரது சடலம் ஞாயிற்றுக்கிழமை மிதந்துள்ளது. இதைக் கண்ட அப்பகுதியினா் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த குழித்துறை தீயணைப்புத் துறையினா் டேவிட்டின் சடலத்தை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.