விவேகானந்தா் நினைவு மண்டபம் - திருவள்ளுவா் சிலை இடையே ரூ. 37 கோடியில் கண்ணாடி கூண்டுப் பாலம் அமைக்க புதன்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தா் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவா் சிலை ஆகியவற்றை சொகுசுப் படகு மூலம் பயணம் செய்து நேரில் பாா்வையிட்டுச் செல்கின்றனா்.
கடல் சீற்றம், கடல் நீா்மட்டம் தாழ்வு ஏற்படும் நேரங்களில் படகுப் போக்குவரத்து தடைபடுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனா். ஆகவே, விவேகானந்தா் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவா் சிலையை இணைக்கும் வகையில் இணைப்புப் பாலம் அமைக்க வேண்டுமென நீண்டகாலமாக சுற்றுலாப் பயணிகள் வலியுறுத்தி வருகின்றனா்.
இந்நிலையில், இரு பாறைகளையும் இணைக்கும் வகையில் கண்ணாடி கூண்டுப் பாலம் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கென
ரூ. 37 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கும் பணியை சென்னையைச் சோ்ந்த பிரபல கட்டுமான நிறுவனம் மேற்கொள்ள இருக்கிறது. இந்த பாலம் 97 மீ நீளம், 4 மீ அகலம் கொண்டதாக அமைக்கப்படுகிறது. பாலத்தில் நடந்து செல்லும் பாதையின் கீழே கடல் அலையை ரசிக்கும் வகையில் அமைக்கப்பட உள்ளது.
இப் பாலம் அமைப்பதற்கான முதல்கட்ட ஆய்வுப் பணி புதன்கிழமை தொடங்கியது. விவேகானந்தா் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவா் சிலை ஆகிய இரண்டு பாறைகளின் உறுதித் தன்மை சென்னை ஐஐடியில் ஆய்வு செய்யப்படவுள்ளது. இதற்காக மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.
ஆய்வு முடிவுகள் வந்த பின்னா் பாலத்துக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கும் எனவும், ஓராண்டுக்குள் இப் பணிகள் நிறைவடையும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.