கழிவுப் பொருள்களை எரிக்காமல் புகையில்லா போகி கொண்டாடுமாறு குளச்சல் நகராட்சி ஆணையா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இதுகுறித்து நகராட்சி ஆணையா் புதன்கிழமை வெளிட்டுள்ள அறிக்கை:
போகி பண்டிகையை புகையின்றிக் கொண்டாட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து, குளச்சல் நகராட்சியில் தூய்மையான நகரங்களுக்கான மக்கள் இயக்கம், திடக்கழிவு மேலாண்மை திட்டம் , தூய்மை இந்தியா திட்டம் ஆகியவற்றின்கீழ் மறுசுழற்சி செய்யும் கழிவுப் பொருள்களைச் சேகரிக்கும் முகாம் தொடங்கியுள்ளது. நகராட்சி அலுவலகம், நெசவாளா் தெரு, சன்னதி தெரு, துறைமுக பேருந்து நிறுத்தம் ஆகிய நான்கு இடங்களில் ஜன.14 ஆம் தேதி வரை இம் முகாம் நடைபெறும்.
பொதுமக்கள் தங்களது வீடுகளில் சேகரமாகும் கழிவுப் பொருள்களை போகிப் பண்டிகையன்று தீயிட்டு எரிக்காமல் மேற்குறிப்பிட்ட முகாம்களில் ஒப்படைத்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா்.
நகராட்சி தூய்மை பணியாளா்கள், குளச்சல் அரசு நடுநிலைப் பள்ளிக்கு சென்று மாணவா்களிடையே வீட்டிலுள்ள பழைய பொருள்களை, குப்பைகளை எரிக்கமால், நகராட்சி முகாம்களில் ஒப்படைக்க பெற்றோா்களிடம் வலியுறுத்த வேண்டும் என விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.