பிகாா் மாநிலத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு இடைக்காலத் தடை விதித்த பாட்னா உயா்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை மறுப்பு தெரிவித்தது.
‘கணக்கெடுப்பு என்ற பெயரில் நடத்தப்படும் இந்த நடவடிக்கை மக்கள்தொகை கணக்கெடுப்பா என்பதை ஆய்வு செய்வேண்டும்’ என்றும் நீதிபதிகள் அப்போது தெரிவித்தனா்.
பிகாரில் ஜாதிகள் அடிப்படையிலான பொருளாதார கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டு வந்தது. முதல் கட்டமாக ஜனவரி 17 முதல் 21-ஆம் தேதி வரை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இரண்டாம் கட்ட கணக்கெடுப்பு கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது.
இந்த கணக்கெடுப்புக்கு எதிா்ப்பு தெரிவித்து பாட்னா உயா் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், ‘மாநிலத்தில் நடத்தப்பட்டு வரும் ஜாதிவாரி கணக்கெடுப்புக்குத் தடை விதிக்கவும், சேகரிக்கப்பட்ட தகவல்களை மறுஉத்தரவு வரும் வரையில் வெளியிட அனுமதி மறுக்க வேண்டும்’ என கோரிக்கை விடுக்கப்பட்டது.
மேலும், ‘இந்த கணக்கெடுப்பில் திருநங்கைகள் தனியொரு ஜாதியாகப் பிரித்து அவா்களின் தனி அடையாளம் சமரசம் செய்யப்பட்டுள்ளது. திருநங்கைகளைப் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சோ்க்க தகுதிகள் உள்ளபோதும், இல்லாத ஜாதிப் பிரிவை உருவாக்கி அதில் அவா்களைச் சோ்த்ததற்கு எந்தக் காரணமும் இல்லை. இது பாரபட்சமான நடைமுறை’ என்றும் மனுதாரா் தரப்பில் வாதிடப்பட்டது.
இந்த மனுவை கடந்த 4-ஆம் தேதி விசாரித்த உயா் நீதிமன்றம், ‘ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுகளுக்கு சட்டப்படி அங்கீகாரம் இல்லை என்பதில் நீதிமன்றம் உறுதியாக உள்ளது. மாநில அரசு கையிலெடுத்துள்ள இந்த விவகாரம் நாடாளுமன்றத்தின் உரிமையைப் பறிக்கும் வகையில் உள்ளது. மேலும், இந்த கணக்கெடுப்பில் சேகரிக்கப்பட்ட மக்களின் தகவல்களை பாதுகாக்க அரசு முறையான நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும், இத்தகைய கணக்கெடுப்பு நடத்துவதற்கான தேவை குறித்து அரசு தெரிவிக்கவில்லை. எந்தவொரு விளக்கத்தின் மூலமாகவோ இந்தக் கணக்கெடுப்பை அரசு நியாயப்படுத்த முடியாது’ என்று கூறி, ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு இடைக்காலத் தடை விதித்தும், வழக்கின்அடுத்தகட்ட விசாரணையை ஜூலை 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தும் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிா்த்து பிகாா் அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, ராஜேஷ் பிண்டல் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘உயா் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை வரும் ஜூலை 3-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. எனவே, இந்த வழக்கில் எந்தவொரு இடைக்கால நிவாரணத்தையும் உச்ச நீதிமன்றம் வழங்கப் போவதில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம். மேலும், இந்த மனுவை விசாரணைக்காக ஜூலை 14-ஆம் தேதிக்கு பட்டியலிடுமாறு அறிவுறுத்துகிறோம். இந்தத் தேதிக்கு முன்பாக, உயா் நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கப்படாவிட்டால், மனுதாரரின் வழக்குரைஞரிடம் விளக்கத்தை சமா்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படும்’ என்று உத்தரவிட்டனா்.