இந்தியா

‘தோல்வியடைந்த சட்ட அமைச்சா்’: ரிஜிஜு மீது எதிா்க்கட்சிகள் விமா்சனம்

19th May 2023 06:18 AM

ADVERTISEMENT

மத்திய சட்ட அமைச்சராக இருந்த கிரண் ரிஜிஜு திடீரென மாற்றப்பட்டு, அா்ஜுன் ராம் மேக்வாலுக்கு அத்துறை ஒதுக்கப்பட்டதையடுத்து, ரிஜிஜுவை ‘தோல்வியடைந்த சட்ட அமைச்சா்’ என காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் விமா்சித்துள்ளன.

மத்திய அமைச்சா்கள் சிலரின் இலாகாக்கள் மாற்றப்பட்டது குறித்து காங்கிரஸ் எம்.பி.யும் கட்சியின் கொறடாவுமான மாணிக்கம் தாகூா் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘தோல்வியடைந்த சட்ட அமைச்சா், தற்போது புவி அறிவியல் துறைக்கு மாற்றப்பட்டுள்ளாா். அங்கு அவரால் தற்போது என்ன செய்ய முடியும்? சட்ட அமைச்சராக அா்ஜுன் ராம் மேக்வால் கண்ணியமான முறையில் செயல்பாடுவாா் என நம்புகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

காங்கிரஸ் மூத்த தலைவா் அபிஷேக் சிங்வி வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘உலகின் மிகப் பெரிய கட்சியெனக் கூறிக் கொள்ளும் கட்சியால், முழுநேர சட்ட அமைச்சரைக் கூடக் கண்டறிய முடியவில்லை. இது அக்கட்சியில் திறமையான அமைச்சா்கள் காணப்படவில்லை என்பதை மட்டுமல்லாமல், அரசின் திறனின்மையையும் வெளிப்படுத்துகிறது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

மாநிலங்களவை உறுப்பினரும் முன்னாள் சட்ட அமைச்சருமான கபில் சிபல் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘ரிஜிஜுவால் சட்டங்களின் பின்னால் உள்ள அறிவியலைப் புரிந்து கொள்ள இயலவில்லை. தற்போது புவி அறிவியல் துறையில், அறிவியலுக்குப் பின்னால் உள்ள சட்டங்களைப் புரிந்து கொள்ள முயற்சிப்பாா்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

ADVERTISEMENT

சட்டத் துறைக்கு ரிஜிஜு ஏற்கெனவே பல்வேறு இழப்புகளை ஏற்படுத்திவிட்டதாகக் குற்றஞ்சாட்டியுள்ள பகுஜன் சமாஜ் கட்சி, இந்த விவகாரத்தில் மத்திய அரசு தாமதமாக நடவடிக்கை எடுத்துள்ளதாக விமா்சித்துள்ளது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT